ரோசமில்லாதவன் ராசாவைவிட பெரியவனாம் என்கிற சீலத்தில் முஸ்லிம் எம்.பிக்கள் !! 


யுத்தத்தை முடித்து தந்த மஹிந்தவின் மீது நல்ல எண்ணம் கொண்டிருந்த முஸ்லிம் சமூதாயம் அந்த ஆட்சியாளனை வீட்டுக்கு அனுப்புவிட்டு இந்த நல்லாட்சியை கொண்டுவர மொத்தமாக அணிதிரண்டது முஸ்லிங்களின் வழிபாட்டு தளங்களை தாக்கிய, முஸ்லிம் உரிமைகளை கேள்விக்குட்படுத்திய தீவிரவாத பௌத்த அமைப்புக்களை கண்டும் காணாமல் இருந்தமைக்கே என்பதை மறந்துவிட்டு இந்த நல்லாட்சிக்கு கூஜா தூக்கும் முஸ்லிம் பெயர் தாங்கிய எம்.பிக்களே உங்களின் ஈனச்செயலை வரும் தலைமுறைகளும் மன்னிக்காது.
மஹிந்த ஆட்சியில் பேரினவாதம் எட்டடி பாய்ந்தால் இந்த கூட்டாட்சியில் எட்டாயிரம் அடி பாய்கிறது என்பதை அறிந்தும் இந்த நல்லாட்சியின் இனவாத சட்டங்களுக்கு சட்டைப்பையை நிரப்பிக்கொண்டு கையைதூக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்திருக்கும் இந்த ஈனச்செயல் வரலாற்று துரோகங்களில் ஒன்றாகும்.
பர்தாவுக்கும்,ஹலாலுக்கும் வீதிகளில் போராடி வென்ற முஸ்லிம் சமூகம் இன்று தனது உரிமைகளின் இதயத்தை இழந்து நிற்பது கடும் வேதனையான ஒன்றே. ஆதவன் பாட்டுக்கும் அஸ்ரபின் உணர்ச்சிபோங்கும் உரைக்கும் தமது உரிமைகளை இழந்து நிற்க்கும் சமூகம் இனி சில நாட்களில் வரப்போகும் பௌத்தமத முன்னுரிமை சட்டத்தின் அங்கீகாரத்தின் மூலம் எமது தாய் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறும் காலம் தொலைவில் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
முஸ்லிங்களுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சட்டமூலம் அவசரமாக கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது வாக்களித்துவிட்டு இப்போது வாயால் வடைசுடும் முஸ்லிம் எம்பிக்களும் நல்லாட்சியின் அமைச்சர்களும் அதற்க்கு முந்தைய தினங்களில் இலங்கை முஸ்லிங்களும், புத்திஜீவிகளும் தமது அதிருப்தியை தெரிவித்தது தெரியாமல் போனது வேடிக்கையே !!
முஸ்லிங்களின் வாக்குரிமை செல்லாக்காசாகும் நிலையை அண்மிக்கிறது இந்த மாகாண சபை திருத்த சட்டமூலத்தை எதிர்த்து வாக்களியுங்கள் என மக்கள் தமது நிலையை தெளிவாக கூறியும் அதனை பொருட்படுத்தாது தனது இஷ்டப்படி நல்லாட்சிக்கு கூஜாதூக்கியுள்ள முஸ்லிம் எம்.பிக்களும் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்த முஸ்லிம் அமைச்சர் அல்ஹாஜ் பைசர் முஸ்தபா அவர்களும் நமது சந்ததியின் நிம்மதியான இருப்புக்கு கேள்விக்குறியை எழுப்பியுள்ளதை மறந்து விடாதீர்கள்.
ஜம்மியத்துல் உலமாவின் தலைமையில் சகல எம்பிக்களும் கூடிய போது சட்டமூலத்த்தை எதிர்க்கபோகிரீர்கள் என நிம்மதியாக நம்பிக்கையாக இருந்த முஸ்லிம் சமூகத்துக்கு மறுநாள் மாலையே உங்களது முகமூடிகளை திறந்து சுயமுகங்க்களை காட்ட முனைந்தது வருத்தமளிக்கும் செயலாகும். பாராளுமன்ற உபகுழு உறுப்பினர்களுக்கே தெரியாமல் அவசர அவசரமாக கொண்டுவரப்பட்ட 25 பக்கங்களுக்கும் கூடிய இந்த சட்ட மூலத்தை வாசிப்பதுக்கு கூட நேரம் ஒதுக்காது வாக்களிப்பு நடைபெற்ற போது எதுவும் அறியாத குழந்தைகள் போல செயற்பட்டதை நம்ப மக்களாகிய நாங்கள் மடையர்களில்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறோம்
இறுதித்தருவாயில் பிரதமருடனும் ஜனாதிபதியுடனும் சண்டைக்கு போன நமது பிரதிநிதிகளுக்கோ அல்லது இந்த சட்டமூலத்தை கொண்டுவந்த சிரேஷ்ட சட்டத்தரணி அமைச்சர் பைசர் முஸ்தபவுக்கோ தெரியாமல் இல்லை இந்த சட்டமூலம் முஸ்லிங்களுக்கு அநீதீளைக்கும் சட்டமூலம் என. அல்லது மற்றைய அமைச்சர்களும் அறியாமல் இருந்தார்களா ? இந்த சட்டமூலத்தை பற்றி. சகலருக்கும் நன்றாக தெரியும். !!
திவிநேகுமை திட்டத்தை அறியாமல் ஆதரித்து போல இந்த திட்டத்தையும் அறியாமல் ஆதரித்ததாக மேடைக்கு மேடை முழங்கமாட்டார்கள் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. மாலையில் வாக்களிப்பை தாமதப்படுத்தி பாராளுமன்ற அமர்வை பகிஸ்கரித்தவர்களை கெலியில் கொழும்புக்கு அழைத்துவந்து வாக்களிப்பை வெற்றிபெற வைக்க இந்த நல்லாட்சி அரசு மேற்கொண்ட சதிகளை எமது பாராளுமன்ற குழந்தைகள் 21 உம் அறியாமலில்லை. இரவுடன் இரவாக திட்டத்தை வெற்றிபெற கங்கணம் கட்டியளைந்த ரணில் அரசின் திட்டத்தை சுதாகரிக்க முடியாமல் போனதன் மர்மம் என்ன ??
2/3 பெரும்பான்மையை நிருபிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தபோது மஹிந்த அணி தொடர்ந்தும் தனது எதிர்ப்பை வலுவாக பதிவு செய்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் 21 எம்பிக்களில் 15 பேர் தமது எதிர்ப்பை காட்டியிருந்தாலும் இந்த மாகாணசபை திருத்த சட்டமூலம் நிறைவேறுவதில் சிக்கலை சந்தித்திருக்கும் என்பதை சட்டத்தரணிகளாக இருக்கும் முஸ்லிம் எம்பிக்களும், அரசியல் சாணக்கியர்களும், சத்திய தலைவர்களும் அறியாமல் போன மர்மம் யாது ?
முஸ்லிங்களின் காவலர்களான மு.க்காவும் ம.க்காவும் தமது எதிர்ப்பை காட்டியிருந்தால் இந்த சட்டமூலம் தோல்வியை சந்தித்திருக்கும் இந்த சட்டமூல வெற்றியின் மூலம் இனி முஸ்லிம் முதலமைச்சர் கனவு இலங்கை நாட்டில் நிறைவேறாமலே போகும் என்பதிலும் முஸ்லிங்களின் அடிப்படை உரிமைகளுக்கு தொடர்ந்தும் பாரிய சிக்கல்கள் தோற்றுவிக்கப்படும் என்பதையும் முஸ்லிம் தலைமைகள் மறந்து செயலாற்றி இருப்பது இங்கு கவலையான ஒரு விடயமே.
வடமாகாண முதலமைச்சர் மு. நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் நேரடியாக நிராகரிக்கப்பட்ட சட்டமூலத்தை முஸ்லிங்களின் தாய் வீடான கிழக்கு மாகாண சபையில் அமோக ஆதரவுடன் வெற்றிபெற செய்து தாங்கள் எப்படிப்பட்ட அரசியல் தலைவர்கள் என்பதை நிருபித்த முஸ்லிம் அரசியல்தலைவர்கள். தங்களுக்கு எந்தவித அரசியல் அனுபவமோ அல்லது நாட்டின் சட்டமோ தெரியாது என்பதை ஒத்துக்கொண்டுள்ளனர். இதில் சில நீதிபதி அளவிலாலான அறிவை கொண்ட சட்டத்தரணிகளும் அடங்குவது வேடிக்கையான விடயமே !!
இதனை தொடர்ந்து இனவாத பிரச்சினைகளை அதிகரிக்கச்செய்யும் தொகுதி வாரி தேர்தல் முறையை எமது நாட்டில் கொண்டுவந்து ஜே.ஆர் காலத்து இலங்கையான இனக்கலவர இலங்கையாக மீண்டும் உருவாக்க இந்த கூட்டரசாங்கம் எடுக்கும் முயற்சியை உன்னிப்பாக அவதானித்து செயலாற்ற முன்வரவேண்டும் என எமது எம்பிக்களை வேண்டிக்கொள்கிறேன். இருபதுக்கு மேற்பட்ட எம்பிக்களை வைத்திருக்கும் முஸ்லிம் சமூகம் கூட்டிக்கழித்து 8 அல்லது 9 எம்பிக்களே இனிவரும் காலங்களில் இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் பெறகூடியதாக இருக்கும். முஸ்லிங்கள் செறிந்து வாழும் கிழக்கு தவிர ஏனைய இடங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இழக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம்.
ஏனைய நாடுகளை ஒப்பிடும் போது எமது நாட்டில் 
முஸ்லிங்கள் மீது பேரினவாத தாக்குதல்கள் குறைவாக இருக்க காரணம் எமது முந்தைய முஸ்லிம் அரசியல் தலைவர்களின் சாணக்கிய அரசியல் காய்நகர்த்தல்களும் இன்றைய பொம்மை எம் பிக்களின் கதிரைகளை சூடாக்கும் படலமுமே தவிர வேறில்லை. பாராளுமன்றத்தில் முஸ்லிங்களின் ஆசனம் குறைகின்ற போது முஸ்லிங்களின் இருப்பு கேள்விக்குறியாகும் என்பதை மறவாதீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தமது இனத்துக்காக ஒன்றுதிரண்டு போராடி வெற்றியை சந்திக்கும் இந்நேரத்தில் நமது பாதை அழிவை நோக்கிநகர்வது ஆபத்தான ஒன்றாகும்.
எதிரணியில் ஒருவர் கூட இல்லாது ஐ.தே. கட்சியிலும் , சு.கட்சியிலும் தமது ஆசனங்களை பலப்படுத்திக்கொண்டு யார் அதிகமாக கூஜாதூக்கலாம் யார் அதிக வருமானத்தை எட்டலாம் என சண்டை போட்டுக்கொண்டு எமது உரிமைகளை தொடர்ச்சியாக இழந்து வரும் சமூகம் என்றால் அது முஸ்லிங்களே என்பது வேதனையான ஒன்றாகும்.
ஜனாதிபதி நாட்டில் இல்லாத சமயம் பிரதமர்ர ணில் தலைமையிலான அரசாங்கம் இந்த சட்டமூலத்தை வெற்றிகொண்ட பின்னர் எல்லை நிர்ணயத்தில் எங்களிடமே கேட்க்க வேண்டும் என கூறும் முஸ்லிம் தலைமைகள் இதற்க்கு முன்னர் பிரதமர் ரணில் கொடுத்த எந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார் என்பதை எங்களுக்கு தெளிவு படுத்த முன்வருவீர்களா ?
கொல்லிமலை சிலையில் தொடங்கி சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை,கல்முனை,சம்மாந்துறை அபிவிருத்தி, அஸ்ரப் மரணத்தின் மர்மம் விலக்குதல் என தொடர்ந்தும் பொய் வாக்குறுதிகளே தந்துள்ளார். இந்த எல்லை நிர்ணயத்திலும் உங்களை முன்னிலை படுத்துவார் என நீங்கள் நம்பினால் உங்களை விட முட்டாள்கள் இந்த பூமியில் யாருமில்லை ......
கையிலிருந்த தங்கத்தை கொடுத்துவிட்டு தகரத்தை எதிர்பார்க்கும் கூட்டமே !!
வடகிழக்கை இணைக்க விடமாட்டோம், இந்த நாட்டில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை என யாப்பில் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது, தொகுதிவாரிக்கு ஆதரவில்லை என ஆண்மையுடன் கூற முடியுமா ? இல்லை இரவோடு இரவாக வரலாற்று துரோகமிழைத்துவிட்டு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி கழுவுற மீனில் நழுவுற மீனாக இருந்ததை போல இருக்கப்போகிறீர்களா ? என கேட்க்க விரும்புகிறேன்.

அல்ஹாஜ் ஹுதா உமர் 
தலைவர் 
அல் - மீஸான் பௌண்டசன் 
சிறிலங்கா

Comments