இனவாத பிரசாரம் செய்வோருக்கு எதிராக மேலும் பல முறைப்பாடுகள்
ஆர்.ஆர்.ரி. அமைப்பு நடவடிக்கை
மும்மான பாடசாலை விளையாட்டு மைதான வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றில் கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. எனினும் இவ்வழக்கு ஒக்டோபர் மாதத்தில் இறுதி தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சாதகமான முடிவுகள் பெறப்படும் என எதிர்பார்ப்பதாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரோஹிங்ய முஸ்லிம்கள் தொடர்பிலும், அவர்கள் இலங்கையில் அகதிகளாக வசிப்பது தொடர்பிலும் குரோதத்தை வளர்க்கும் வகையில் போலியான தகவல்களை கொண்டு சூழ்ச்சிமிக்க பிரசாரங்களை சமூக ஊடகங்களில் மேற்கொண்ட வகையில் டான் பிரியசாத், அமித் வனசிங்க, ராஜாங்கனயே சதாரத்ன ஹிமி, மஹாசன் பாலகயா அமைப்பின் அமித் வீரசிங்க ஆகியோருக்கு எதிராக கடந்த 20 ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தில் 4 முறைப்பாடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் அளுத்கம கலவரத்தின்போது பலியான இரு முஸ்லிம்களின் மரண விசாரணை தொடர்பான வழக்கு களுத்துறை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் கடந்த 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேக நபர்களைக் கைது செய்ய தமக்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாக கொழும்பு குற்றப்பிரிவு (சி.சி.டி) உத்தியோகத்தர் கோரியதைத் தொடர்ந்து வழக்கு நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஞானசார தேரருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடந்த 21 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் மேலதிக விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது ஆர்.ஆர்.ரி. சட்டத்தரணிகளும் பிரசன்னமாகி நீதிமன்ற நடவடிக்கைகளை அவதானித்தனர்.
இதேவேளை டான் பிரியசாத்துக்கு எதிரான வழக்கு கடந்த 22 ஆம் திகதி கோட்டை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் சட்டமா அதிபரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. பிணையில் இருந்த காலப்பகுதியிலும் சந்தேக நபர் முன்னர் செய்த குற்றத்தையே செய்து வந்ததற்கான எழுத்து மூலமான ஆதாரங்கள் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.
டான் பிரியசாத்துக்கு எதிரான 6 பிந்திய குற்றச்சாட்டுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முறைப்பாடுகள் தாக்கல் செய்யப்பட்டதன் பிரதிகள் 22.09.2017 அன்று நடைபெற்ற இந்த வழக்கிற்கு முன்னதாகவே உரிய பொலிஸ் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டதுடன் பிணை வழங்குவதை தடை செய்யும் விதமாக பிணை வழங்கல் சட்டத்தின் கீழ் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்யுமாறும் கோரப்பட்டுள்ளது.
டான் பிரியசாத் முழுநாட்டுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் விதம் பற்றியும் தண்டனையிலிருந்து தப்பிப் பிழைக்கும் விதம் பற்றியும் நீதிமன்றுக்கு தாம் எடுத்துக் கூறியதாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார்.
டான் பிரியசாத் நீதிபதியால் கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன், முறைப்பாடுகள் தொடர்பில் துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸாரை நீதிவான் அறிவுறுத்தினார்.


Comments
Post a Comment