சட்டக் கல்லூரிக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் தொகை அதிகரிக்கப்படும்
ஹஸன் இக்பால்
இலங்கை சட்டக் கல்லூரிக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் யோசனையொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ளார்.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்திருந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே மேற்படி முன்மொழிவு பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் இலங்கையிலுள்ள சட்டத்தரணிகளின் எண்ணிக்கை குறைந்தளவாக காணப்படுவதாக பிரதமர் அலுவலகம் முன்னெடுத்த பகுப்பாய்வுகளில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்தே மேற்குறித்த முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டக் கல்லூரிக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் நாட்டில் நிலவும் சட்டத்தரணிகள் பற்றாக்குறையை நிவர்த்திக்க முடியும் எனவும், சட்டத்துக்கு கட்டுப்படும் சமூக கட்டமைப்பை உருவாக்குவதை உறுதிப்படுத்த முடியும் எனவும் மேற்குறித்த முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர் வெட்டுப் புள்ளி முறைமையும் வரையறுக்கப்பட்ட சட்டக் கல்வி வாய்ப்புக்களுமே இலங்கையில் சட்டத்தரணிகள் பற்றாக்குறைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
உயர் வெட்டுப் புள்ளி முறைமை காரணமாக 8,432 மாணவர்கள் அரச சட்டக் கல்லூரியில் நுழையும் வாய்ப்பை இழந்துள்ளதாகவும், 5,135 மாணவர்கள் குறித்த துறைக்கு விண்ணப்பித்திருந்தும் வெறும் 239 மாணவர்களே நுழைவு தகுதியை பெற்றுள்ளதாகவும் 2016 ஆம் ஆண்டுக்கான புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல சட்டக் கல்லூரிகளை புதிதாக நிர்மாணித்தல், சட்டக் கல்வியுடன் தொடர்பான பல்வேறு பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துதல் என்பவற்றுடன் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சட்டக் கல்விப் பரீட்சைகளை நடாத்துதல் மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் மேற்பார்வையில் சட்டக் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்துதல் என்பன குறித்தும் இம்முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Comments
Post a Comment