மியன்மார் அப்பாவி முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்க ஒப்புக் கொண்ட இலங்கை அரசுக்கு நன்றி – SLTJ
மியன்மார் – ரோஹிங்யா மாநிலத்தில் இருக்கும் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது மியன்மார் இரானுவம் நடத்தி வரும் மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவித்த இலங்கை அரசாங்கத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
மியன்மார் – ரோஹிங்ய மாநிலத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் மீது அந்நாட்டு இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி, ஆயிரக் கணக்கானவர்களை கொண்றொழித்துள்ளது. இந்நிலையில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இலட்சக் கணக்கான மக்கள் வங்காலதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளார்கள். உயிர் பிழைக்க எண்ணி கடல் வழியாக தப்பிக்க முனைந்த பல்லாயிரக் கணக்கானவர்கள் கடலில் மூழ்கி இறந்து போயுள்ளனர்.
மியன்மாரில் கொல்லப்படும் அப்பாவி முஸ்லிம்களை காப்பாற்ற வேண்டி உலகம் முழுவதும் பாரிய ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இலங்கையிலும் கடந்த 14.09.2017 அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தும் மியன்மார் அரசையும், இராணுவத்தையும் கண்டித்தும் பாரிய மக்கள் திரல் ஆர்பாட்டம் ஒன்று கொழும்பில் நடைபெற்றது.
குறித்த ஆர்பாட்டத்தில் இலங்கை அரசிடம் இரண்டு முக்கிய கோரிக்கைகளை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் முன்வைத்தது.
மியன்மார் இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து தப்பித்து அகதிகளாக இலங்கை வரும் மியன்மார் அகதிகளுக்கு இலங்கை அரசு அடைக்கலம் கொடுக்க வேண்டும்.
அதே போல், இலங்கை பௌத்த மதத்தை பின்பற்றும் மக்களை அதிகமாக கொண்ட ஒரு நாடு என்ற வகையில் அதே பௌத்த மதத்தை பின்பற்றுவதாக கூறிக் கொள்ளும் மியன்மாரின் ஆளும் ஆங் சாங் சூகியின் அரசின் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் வன்மையாக கண்டிக்க வேண்டும் என்றும் குறித்த ஆர்பாட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் 21.09.2017 அன்று மியன்மார் அரசின் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தக் கோரி முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பிரேரனையின் போது அரசாங்கம் குறித்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளது.
மியன்மார் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைபாட்டை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன வெளியிட்டார்.
மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் வன்மையாக கண்டிப்பதுடன், அங்கு நடைபெறும் மோசமான சம்பவங்கள் தொடர்பில் நாம் கவலையடைகிறோம்.
இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையில் நீண்ட கால தொடர்பிருக்கிறது. குறிப்பாக இரு நாட்டுக்கும் இடையில் இருக்கும் பௌத்த மத ரீதியலான தொடர்புகள் தொன்மையானவை. இரு நாட்டு உறவுகளும் மிக நெருக்கமானது.
இந்நிலையில் அந்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான நிலைமைக்கு இலங்கை அரசின் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்துடன், அகதிகலாக்கப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் நாம் கரிசனையுடனேயே இருக்கிறோம்.
தற்போது ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலையில் நாம் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொள்ளப் போவதில்லை. குறிப்பாக கடந்த காலங்களில் நாம் அவர்களை அரவணைத்திருக்கிறோம். இனி வரும் காலங்களிலும் மனிதாபிமான ரீதியில் அவர்களுக்கு உதவ எந்நேரமும் தயாராகவே இருக்கிறோம். ஐக்கிய நாடுகள் சபையில் அகதிகள் தொடர்பான பிரகடனத்திற்கு அமைய ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு ஆதரவளிப்போம்.
அகதிகளுக்கு அடைக்கலமளிப்பதில் நெருக்கடி ஏற்பட்டால் நாம் அவர்களுக்கு அடைக்கலமளிக்கவும் தயாராகவே இருக்கிறோம்.
இலங்கையில் இருக்கும் மியன்மார் அகதிகளுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்குவோம்.
மியன்மாரில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இந்நிலை சீர்செய்யப்பட வேண்டும் என நாம் எமது அலுத்தங்களை தெரிவித்து, சமாதானத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்துவோம்.
என்று மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைபாட்டை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு இலங்கை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்சியை ஏற்படுத்தும் ஓர் அறிவிப்பாகும் என்பதுடன் முஸ்லிம் நாடுகள் சிலவற்றுக்கும் இது ஒரு முன்னுதாரணமாகும்.
அந்த வகையில் இலங்கை அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை இலங்கை முஸ்லிம்கள் சார்பில் தவ்ஹீத் ஜமாஅத் – SLTJ வரவேற்பதுடன், அரசுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.



Comments
Post a Comment