சந்திரிக்கா- ஜோன் செனவிரத்ன: ஒரே கட்சி மேடையில் முரண்பாடான கருத்துக்கள்


கூட்டு எதிர்க் கட்சியிலுள்ளவர்களை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொள்வதற்கு தான் ஒரு போதும் விரும்புவதில்லையென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
எஹலியகொட பிரதேசத்தில் இன்று (29) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் திருடர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி திருடர்கள் அற்ற ஒரு கட்சியாகும்.
தாம் கட்சியில் இணைந்து கொள்வதாயின் தாம் தொடர்பில் உள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் எனவும், ஊழல்களைக் கண்டறியும் பொலிஸ் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் நிபந்தனை விதிப்பவர்களை எவ்வாறு கட்சியில் சேர்த்துக் கொள்வது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை, இன்றைய தினம் எஹலியகொடவில் நடைபெற்ற அதே நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜோன் செனவிரத்ன தனது உரையில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சியினரை இணைத்துக் கொண்டு தேர்தலை முகம்கொடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Comments