நீதிபதி இளஞ்செழியனுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்ட போது வழக்கு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதா?


புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது நீதிபதி மா.இளஞ்செழியனுக்கு நேரடியாக உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டது.

இவற்றுக்கு பயந்து நீதிபதிகள் வேறு நீதிமன்றம் வேண்டும் என்று கோரவில்லை. வேறு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்படவும் இல்லை. யாழிலேயே குறித்த வழக்கை வெற்றிகரமாக நடத்தினார்கள். இவ்வாறிருக்க அரசியல் கைதிகளின் வழக்குகள் மட்டும் ஏன் அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றப்பட்ட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியல் கைதிகள் தொடர்பான வழக்கு விசாரணைகளில், சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் வழக்கை வவுனியாவுக்கு மாற்றமுடியாது என்று சட்டமா அதிபர் தெரிவிக்கும் கருத்தை ஏற்க முடியாது.

சாட்சிகளுக்கு அச்சுறுத்தலெனில் அவர்களுக்குப் பாதுகாப்பை வழங்கியேனும் வழக்கை வவுனியாவிலேயே நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், இது தொடர்பில் அரசு பாராமுகமாக செயற்படுவது கவலையை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுக்கான தீர்வை பெற்றுத்தருவதற்கு தமிழ் தலைமைகளோ, சிறை நிர்வாகமோ முன்வரவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் என சட்டமா அதிபர் கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயம் அல்ல. ஏன் இந்த நாட்டில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு இல்லையா?

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம், பயங்கரவாத அச்சுறுத்தல் நாட்டில் இல்லை என மார்தட்டும் அரசியல் வாதிகள் இந்த ஆட்சியில் இருக்கின்றார்கள். அப்படி என்றால் இந்த சாட்சிகளுக்கு ஏன் பாதுகாப்பு வழங்க முடியாது எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments