ஹம்பாந்தோட்டை சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை! பொலிஸ்மா அதிபர் உறுதி
ஹம்பாந்தோட்டையில் சுதந்திர ஊடகவியலாளர் ஒருவரை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தாக்கிய சம்பவம் தொடர்பில் தார்மீகப் பொறுப்பை ஏற்று கடும் கவலையை வெளியிட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஹம்பாந்தோட்டை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் துஷார தளுவத்த, சுதந்திர ஊடகவியலாளர் சுசந்த பண்டார கருணாரட்னவை கன்னத்தில் அறைந்திருந்தார்.
இது பல்வேறு மட்டங்களில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வினவியபோது மேற்கண்டவாறு தெரிவித்துள்ள பொலிஸ்மா அதிபர், காலி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின்கீழ் விசேட குழுவொன்று இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருவதாகவும், விசாரணை முடிவில் தாக்குதலை நடத்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
"இவ்வாறான செயற்பாடுகளை நான் பதவியில் இருக்கும்வரை அனுமதிக்கமாட்டேன். சீருடையணிந்த பொலிஸார் மக்களைப் பாதுகாக்கவேண்டும். தவறு யார் செய்தாலும் தவறுதான்'' என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக சர்வதேச ரீதியில் குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில் இப்படியான தாக்குதல்கள் தவறானதல்லவா என்று கேள்விக்குப் பதிலளித்துள்ள பொலிஸ் மா அதிபர், "நிச்சயம் இது ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஒன்று. ஆனால், நீதியை பாதிக்கப்பட்டவருக்கு பெற்றுக்கொடுப்போம்'' என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Comments
Post a Comment