நிந்தவூரில் தொடர் கடலரிப்பு! தென்னை மரங்களும், மீனவர் வாடிகளும் சேதம்
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வவ்வாளோடை பகுதியில் ஏற்பட்டுள்ள தொடர் கடலரிப்புக் காரணமாக கடலை அண்டிய பகுதிகள் கடல் நீரால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இதனால் மீனவர்களின் மீன்பிடி வாடிகளும், அந்த வாடிகள் அமைந்துள்ள பிரதேசத்தில் காணப்படும் தென்னை மரங்களும் கடல் நீரால் காவு கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,
தொடர்ச்சியான கடலரிப்புக் காரணமாக எங்களது அன்றாட மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஒவ்வொரு இரவுப் பொழுதிலும் நிம்மதியின்றி உறங்குகின்றோம்.
எந்த நேரத்தில் தமது உடமைகள் கடல் நீரால் காவு கொள்ளப்படும் என்ற நிலைமையால் மிகவும் கவலையுடன் உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில் சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசிம் குறித்த பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து இது தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
அத்துடன், கடலரிப்பால் மீனவர்கள் படும் துயரங்களை கேட்டறிந்து கொண்டதோடு குறிப்பிட்ட பகுதிகளுக்கு கடலரிப்பினை தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுப்பதாகக் கூறி அதற்கான வேலைகளையும் முன்னெடுத்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக மண் நிரப்பப்பட்ட பைகளை கடலோரங்களில் பதிப்பதாகவும், இது சாத்தியமாகாத பட்சத்தில் கடலரிப்பை தடுக்க நிலையான நடவடிக்கைள் எடுக்கப்படவுள்ளதாகவும் பிரதியமைச்சர் பைசால் காசிம் இதன்போது தெரிவித்துள்ளார்.



Comments
Post a Comment