அதாவுல்லா அவர்களிடம் ஒரு கேள்வி...!
அதாவுல்லா அவர்கள் ஒரு நேர்மையான அரசியல்வாதி என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து கிடையாது, சமூக சிந்தனையுள்ளவர் மட்டுமல்ல அவருக்கு இயன்றவரை சமூகத்துக்காக போராடி வந்தவர், வருகின்றவர் என்பதில் எங்களுக்கு எந்தவித ஐயமும் கிடையாது.
இருந்தாலும் அண்மைக்காலங்களாக உங்களுடைய பிரச்சாரங்களில் பிரதமர் ரணில் அவர்களுடைய செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து வருவது மட்டுமல்ல, அதற்கு காரணமாக மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் ரணில் ரைவராக இருக்கும்வரை அந்த பஸ்ஸில் முஸ்லிம்கள் பயணிக்கக்கூடாது என்று கூறியதன் காரணமாகவும், அதற்கேற்றாப்போல்தான் ரணிலுடைய செயல்பாடுகளும் அமைந்துவருகின்றன என்ற காரணத்தினாலும், பிரதமர் ரணில் அவர்களை நீங்கள் விமர்சித்து வருகின்றீர்கள்.
அதில் பல உண்மைத் தண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன.
இருந்தாலும் இந்த ஆட்சியின் முதுகெழும்பாக இருக்கின்ற ஜனாதிபதி மைத்திரி அவர்களின் செயல்பாட்டில் நீங்கள் குறைகாண்பதை தவிர்த்து வருகின்றீர்கள்.
இந்த ஆட்சியில் மாயக்கல்லில் சிலை வைத்தவிடயத்தில் ஜனாதிபதி மைத்திரி அவர்கள் அவருடைய செயலகத்தின் ஊடாக அம்பாரை அரசாங்க அதிபருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார்.
அந்த கடிதம் பொதுபல சேனா ஜனாதிபதி மைத்திரிக்கு எழுதிய கடிதத்துக்கு பதில்கடிதமாகவே அமைந்திருந்தது, அதிலே பொதுபலசேனாவினர் ஜனாதிபதி மைத்திரியிடம் கேட்டிருந்தார்கள், தீகவாபிக்குறிய காணிகளை முஸ்லிம்கள் அடாத்தாக பிடித்திருக்கின்றார்கள் அதனை மீட்டுத்தாருங்கள் என்று கேட்டபோதுதான், அதற்கு பதில் கடிதமாக ஜனாதிபதி மைத்திரி அவர்கள் அதனை மீட்டுக்கொடுங்கள் என்று மறு கடிதம் அம்பாரை அ.அதிபருக்கு அனுப்பியிருந்தார்.
உண்மையிலேயே இந்த விடயத்தை ஜனாதிபதி அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரை அனுகி இது சம்பந்தமாக ஆராய்ந்ததன் பின்தான் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும், அல்லது இதனை விசாரித்து நடவடிக்கை எடுங்கள் என்றாவது அ.அதிபருக்கு கடிதம் அனுப்பியிருக்கலாம், அப்படி ஜனாதிபதி அவர்கள் நடந்துகொள்ளாமல் தீகவாபிக்கு சம்பந்தமில்லாத இறக்காமம் பிரிவிக்குள் அமைந்துள்ள தனியார் காணியை அது தீகவாபிக்குறிய காணி என்று தன்னிச்சையாக ஜனாதிபதி முடிவெடுத்து, அதனை மீட்டுக்கொடுங்கள் என்று அ.அதிபருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
ஜனாதிபதியின் அந்த கடிதத்துக்கு நடவடிக்கை எடுங்கள் என்று ஞானசார தேரர் அ.அதிபரை ஏசி எச்சரிக்கை பண்ணிய விடயங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அதன் பிற்பாடு அ.அதிபர் பட்டபாடெல்லாம் ஊரிந்த உண்மையாகும். இந்த விடயத்தின் உண்மைத்தண்மையை அறிந்து கொள்ளாமல் இனவாதிகளின் கதையைக் கேட்டு ஜனாதிபதி மைத்திரி அவர்கள் நடந்து கொண்டவிடயம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
அதே போன்று மரிச்சிக்கட்டியை இனவாதிகளின் கதையை கேட்டு வில்பத்து காடாக அறிவிக்கும் வர்த்தமாணி அறிவித்தலில் அவசர அவசரமாக கையொப்பம் இட்டது யார்? அதன் பிற்பாடு ஒன்றும் தெறியாத வபா போன்று ஜனாதிபதி நடந்து கொண்டுவரும் விடயங்களையும் நீங்களும் அறிந்திருப்பீர்கள்.
அதே போன்று ஜனாதிபதி மைத்திரியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வனஇலாகா திணைக்களம், வட்டமடுவில் உள்ள தனியார்களின் பயிர் செய்கைபண்ணும் காணிகளை காடாக அறிவித்தது, இதனை ஜனாதிபதியின் கவணத்துக்கு கொண்டுபோனபோது, பொலநறுவையில் தனக்கும் அப்படித்தான் அவர்கள் செய்கின்றார்கள் என்று கூறி தனது இயலாமையை வெளிப்படுத்தி தானொரு அப்பாவி போன்று நடந்து கொள்ளப்பார்க்கின்றார். (உண்மையிலேயே இது நம்பக்கூடிய விடயமா என்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.)
ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பிரதமர் ரணிலைவிட ஜனாதிபதி மைத்திரி அவர்கள்தான் ஞானசாராவோடு பல முறை சந்திப்புக்களை மேற்கொண்டும் வருகின்றார். அதே நேரம் பொதுபலசேனாவின் முக்கிய அங்கத்தவர்களுக்கு தொகுதி அமைப்பாளர் பதவிகளும், இதர பதவிகளும் கொடுத்து கௌரவபடுத்தியும் வருகின்றார்.
20வது திருத்தச்சட்டத்தின் மூலம் தேர்தலை பிற்போடுவதற்கும் முன்னிற்பவரே இந்த ஜனாதிபதி மைத்திரி அவர்கள்தான் என்பதை விடயத்தை நன்கு அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள். தேர்தல் ஒன்று வருமாயிருந்தால் ரணிலைவிட பாதிக்கப்படபோவது மைத்திரி அவர்கள்தான், அதன் காரணமாகவே ஏதோ காரணங்களைக்காட்டி தேர்தலை பிற்போட்டு வருகின்றார்கள் என்பதே உண்மையாகும்.
இப்படி பல விடயங்களை நாம் குறிப்பிடமுடியும். சகல அதிகாரம் பொருந்திய ஜனாதிபதி மைத்திரி அவர்கள் அவருடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்களின் ஒரு பிரச்சினையைக்கூட இதுவரை தீர்த்துவைக்கவில்லை, மாறாக இனவாதிகளின் கதைகளைக்கேட்டு முஸ்லிம்களுக்குத்தான் அநியாயம் செய்து வருகின்றார் என்பதே எங்கள் கருத்தாகும்.
அதனால்தான் உங்களிடம் கேட்கின்றோம் ரணிலை கண்டிக்கும் அதே வேகத்தோடு மைத்திரி அவர்களையும் நீங்கள் கண்டிக்க தவறுவது ஏன்? என்ற கேள்விக்கு பதில் இல்லையென்றால், ஜனாதிபதி மைத்திரியின் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு செய்யும் அநியாயங்களுக்கு, தற்போது அவருடைய கட்சியிலே அங்கம் வகிக்கும் நீங்களும் அதற்கு உடந்தைதான் என்பதே எங்கள் கருத்தாகும்.
ஆகவே, உண்மையான அரசியல்வாதியாக நீங்கள் இனம் காணப்பட்டாலும், இந்த விடயத்தில் உங்களின் உண்மைத்தண்மை தெளிவில்லாமல் இருக்கின்றது என்பதே உண்மையாகும்.
எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை...


Comments
Post a Comment