சிவாஜிலிங்கம் உள்ளிட்ட தரப்பினருக்கும் – ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு


அண்மையில் யாழ்ப்பாணத்தில் கறுப்புக் கொடி ஏந்தி எதிர்ப்புத் தெரிவித்த வட மாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட தரப்பினர் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து தமது கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.
கடந்த யுத்த காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளின் காரணமாக சிறைத் தண்டனை பெற்றுள்ள தமிழ் சிறைக் கைதிகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தற்போது வழக்கு நடவடிக்கைகளுக்கு முகங்கொடுத்துள்ளவர்கள் தொடர்பில் நிவாரணமொன்றைப் பெற்றுத்தருமாறு அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் அச் சிறைக் கைதிகளையும் போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள சிறையிலுள்ள சிறைக் கைதிகளையும் வேறாக வைக்குமாறும் கோரிகைகளை முன்வைத்த அவர்கள், அச் சிறைக்கைதிகளுக்கு தொழில் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இதுவரை காலம் வவுனியா நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்து அநுராதபுர நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டிருக்கும் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கை மீண்டும் வவுனியா நீதி மன்றத்தில் விசாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

Comments