ஹஜ் :அடுத்த வாரத்தில் விசாரணைக்கு அழைப்பு
32 ஹஜ் விண்ணப்பதாரிகள் இவ்வருடம் இறுதி நேரத்தில் ஹஜ் கடமையை மேற்கொள்ள முடியாமற்போனமைக்கு காரணமான மூன்று ஹஜ் முகவர் நிலையங்களின் உரிமையாளர்களை அரச ஹஜ்குழு அடுத்தவாரம் விசாரணைக்கு அழைத்துள்ளது.
இறுதி நேரத்தில் ஹஜ் கடமையைத் தவறவிட்ட 32 ஹஜ் விண்ணப்பதாரிகளும் இலங்கைக்கு மேலதிகமாகக் கிடைத்த 600 கோட்டாவுக்குள் உள்ளடங்கப்பட்டவர்களாகும். பாதிக்கப்பட்ட 32 ஹஜ் விண்ணப்பதாரிகளும் ஹஜ் கட்டணங்களை சம்பந்தப்பட்ட மூன்று ஹஜ் முகவர் நிலையங்களுக்குச் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்விவகாரம் தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி.சியாத் கருத்து தெரிவிக்கையில் சம்பந்தப்பட்ட மூன்று ஹஜ் முகவர் நிலையங்களின் உரிமையாளர்களில் ஒரு முகவர் நிலைய உரிமையாளர் தொடர்ந்து சவுதி அரேபியாவில் தங்கியிருந்தமையே விசாரணையின் தாமதத்திற்குக் காரணமாகும். குறிப்பிட்ட முகவர் நிலைய உரிமையாளர் இலங்கை திரும்பி விட்டதாலே அடுத்த வாரம் விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின் போது சம்பந்தப்பட்ட ஹஜ் விண்ணப்பதாரிகள் முகவர்களுக்குச் செலுத்தியுள்ள பணம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும். அப்பணத்தை மீளப்பெற்று பாதிக்கப்பட்டுள்ள ஹஜ் விண்ணப்பதாரிகளிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்படும்.
சம்பந்தப்பட்ட மூன்று ஹஜ் முகவர் நிலையங்களின் உரிமையாளர்கள் விசாரணையின் பின்பு மேலதிக விசாரணைகளுக்காக ஓய்வுபெற்ற நீதிபதி யு.எல்.மஜீடின் தலைமையிலான ஹஜ் முறைப்பாடுகளை விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.
ஹஜ் பயணம் மேற்கொண்ட ஹஜ்ஜாஜிகள் முறைப்பாடுகள் ஏதும் சமர்ப்பிக்க விரும்பின் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்பு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க முடியும். முறைப்பாடுகள் அடுத்தமாதம் 15 ஆம் திகதிக்குப் பின்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. என்றாலும் இறுதி நேரத்தில் ஹஜ் கடமையை மேற்கொள்ள முடியாமற் போன 32 பேரின் முறைப்பாடுகள் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை குறிப்பிட்ட 32 பேரினதும் வாக்கு மூலங்களை அரச ஹஜ் குழு பதிவு செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து எழுத்துமூல முறைப்பாடுகளையும் பெற்றுக் கொண்டுள்ளது. சம்பந்தப்பட்ட 3 ஹஜ் முகவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹஜ் முகவர்கள் மூலம் குறிப்பிட்ட 32 ஹஜ் பயணிகளுக்கு செலுத்தப்பட்டுள்ள தலா 2529 சவுதி ரியால்கள் முஅல்லிம் கட்டணத்தை மீளப் பெற்றுக்கொள்வது தொடர்பாக ஹஜ் குழு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றார்.


Comments
Post a Comment