தெற்கில் அரசியல் பிரளயத்துக்கு வியூகம் வகுக்கும் பசில்!
பசில் ராஜபக்சவின் அரசியல் நகர்வுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக பசில் ராஜபக்சவுடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.
2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாய சூழலுக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் அரசைப் போன்று மகிந்த ராஜபக்ச தலையிலான பொது எதிரணியின் எதிர்கால அரசியலும் தங்கியுள்ளது.
அரச தரப்பினரும், அரசின் நகர்வுகளுக்குக் கடுமையான சவாலை விடுத்துவரும் மகிந்த அணியினரும் தேர்தலில் சிறந்த பெறுபேற்றைப் பெறாவிடின் அது அவர்களின் எதிர்கால அரசியலுக்கு சவால்விடும் காரணியாக மாறிவிடும்.
சமகால அரசியல் போக்கை தமக்குச் சாதகமாக்கிக்கொள்ள பசில் ராஜபக்ச மூலோபாய அரசியல் தந்திரங்களை நகர்த்திச் செல்கின்றார்.
அண்மையில் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், முதல் முறையாக யுத்தத்தின்போது சில இராணுவத்தினர் குற்றமிழைத்ததை ஏற்றுக்கொண்டிருந்தார்.
பெரும்பான்மை மக்களைப் போன்று வடக்கு, கிழக்கு மக்களின் ஆதரவையும் பெற்றாலேயே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிவாகை சூட முடியும் என்பது பசில் ராஜபக்சவின் அரசியல் நோக்கமாக உள்ளது.
பசில் ராஜபக்சவின் அரசியல் போக்கைக் கண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் தலைமைகள் அதிருப்பிலும் அச்சத்திலும் உள்ளனர்.
மறுபுறத்தில், சுதந்திரக் கட்சியின் சில முக்கிய அரசியல் தலைமைகள் பசில் ராஜபக்சவுடன் தொடச்சியாக பேச்சு நடத்தி அரசின் எதிர்கால, தற்போதைய செயற்பாட்டுகளை அவருக்குக் கூறி வருகின்றனர் எனவும், உள்ளூராட்சித் சபைத் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கி பாரிய அரசியல் பிரளயத்தை ஏற்படுத்தத் தயாராகி வருவதாகவும் அறியமுடிகின்றது.


Comments
Post a Comment