கரையோர மாவட்ட கோரிக்கை இடைக்கால அறிக்கையில் இல்லை
கிழக்கில் முஸ்லிம்களுக்கென்று தனியான நிர்வாக கரையோர மாவட்டம் தேவையென ஒரு பிரேரணையாக முஸ்லிம் காங்கிரஸ் புதிய அரசியலமைப்பு வழிநடத்தில் குழுவிடம் சமர்ப்பித்திருந்தது. ஆனால் அப்பிரேரணை வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் சேர்க்கப்படவில்லை. இது தொடர்பில் நான் விளக்கம் கேட்டிருக்கிறேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல் மற்றும் நகரதிட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகத்தில் நடைபெற்ற ‘தேர்தல் திருத்தங்களும் இடைக்கால அறிக்கையும்’ எனும் தலைப்பிலான திறந்த கலந்துரையாடலில் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில் ‘புதிய அரசியலமைப்பில் வடகிழக்கு இணைக்கப்படபோகிறது, சமஷ்டி ஆட்சி வழங்கப்படப்போகிறது என்று தெற்கு மக்கள் மத்தியில் ஒரு பீதியை உருவாக்கும் நிலைதோன்றியுள்ளது. இதுவரை சிறுபான்மையினருக்கான ஒரு தீர்வு வராத நிலையில், வட கிழக்கில் உள்ள முஸ்லிம், தமிழ் அரசியல் வாதிகள் வட– கிழக்கு இணைப்பு தொடர்பில் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள் கிழக்கில் உள்ள அரசியல்வாதிகள். நான் வடகிழக்கு இணைப்பை எதிர்ப்பதாக கூறுகிறார்கள்.
கிழக்கிலுள்ள அரசியல்வாதிகள் வட– கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் கைதூக்கி விட்டது என்று குற்றம் சுமத்துகிறார்கள். வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் முஸ்லிம்களுக்கென்று தனியான நிர்வாக அலகு தேவை. முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது. தனியான கொள்கைகள் இருக்கின்றன. தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு குறுக்கே நிற்கும் ஒருவனாக நான் பார்க்கப்படத் தேவையில்லை. சும்மா இருக்கும் சங்கை ஊதிக்கெடுக்க விரும்பவில்லை. வடக்கு –கிழக்கை மையமாக வைத்து வங்குரோத்து அரசியல் செய்ய விரும்பவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் இதனால் வாக்குத்தேட வேண்டும் என்பதும் தவறு.
வடக்கு, கிழக்கு இணைந்தாலும் பிரிந்திருந்தாலும் எமக்குத் தனிஅலகு தேவை. கிழக்கில் கரையோர மாவட்டம் முஸ்லிம்களுக்கு அவசியம் என்பதில் முஸ்லிம் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. பேரினவாதக் கட்சிகள் இந்நாட்டில் சிதறி வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களின் முதுகில் ஏறி அரசியல் செய்யும் நிலைமை இன்று உருவாகியிருக்கிறது.
உள்ளூராட்சி மன்றங்களின் திருத்தச்சட்ட மூலத்துக்கு எதிராக உயர்நீதி மன்றம் சென்று நாம் போராடியுள்ளோம். இன்று விஷயம் தெரியாமல் எதையும் புரிந்து கொள்ளாமல் எம்மவர்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள்.
சில விஷயங்களைக் கூறி மக்களிடம் கைதட்டு வாங்கும் வங்குரோத்து அரசியலை நாங்கள் செய்ய விரும்பவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிங்கள, தமிழ் மக்களுக்கு எதிரான கட்சியல்ல. நாங்கள் எதிரானவர்களுமல்லர். முஸ்லிம் சமூகம் நடுநிலைமையான சமூகம். குர்ஆனின் போதனைகளுக்கேற்ப வாழும் சமூகம். குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்களாக நாம் இருப்பவர்களல்ல என்றார்.


Comments
Post a Comment