டான் பிரியசாதுக்கு வழங்கப்பட்டிருந்த பிணை இரத்து – தொடர்ந்தும் விளக்கமறியலில்
ரோஹிங்ய அகதிகள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள டான் பிரியசாதை எதிர்வரும் 10ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் பிரச்சார நடவடிக்ககையில் ஈடுபட்டமை தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வுத்தரவு வழங்கப்பட்டது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் RRT சட்டத்தரணிகள் அமைப்பு சந்தேகநபரின் பிணையை இரத்துச் செய்து தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். எனினும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சந்தேகநபரின் பிணையை இரத்துச் செய்ய முடியாது என வாதிட்டார்.
நீதவான் அதனை மறுத்து பிணையை இரத்துச் செய்ததுடன் சந்தேக நபரின் நடவடிக்கைகள் தனி நபருக்கு எதிரானது மட்டுமன்றி ஒட்டு மொத்த சமூகத்துக்கும் நாட்டுக்கும் எதிரானது என குறிப்பிட்டார்.
இனங்ளுக்குக்கிடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் செயற்பட கூடாது என கடும் எச்சரிக்கைக்கு மத்தியில் பிணையில் விடுவிக்கப்பட்ட இவர், பிணை நிபந்தனைகளை மீறும் வகையில் செயற்பட்டுள்ளதாக இதன்போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதவானிடம் முன்வைத்தனர்.
குறித்த சந்தேக நபர் ரோஹிங்ய அகதிகளுக்கு எதிராக செயற்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


Comments
Post a Comment