வீட்டுத்திட்டம் தொடர்பில் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்களுக்கும் - மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளருக்குமிடையில் விசேட சந்திப்பு .



யாழ் முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்ட 200 வீட்டுத்திட்டங்களையும் முழுமையாக வழங்க வேண்டுமென்று கடந்த 26.10.2017 அன்று யாழ் மாவட்ட செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை முஸ்லிம் மக்கள் மேற்கொண்டிருந்தனர். இதன் போது அங்கு வருகை தந்த வடக்குமாகாணசபை உறுப்பினரகளான கௌரவ அய்யூப் அஸ்மின் மற்றும் கௌரவ இமானுவேல் ஆர்னோல்ட் ஆகியோரிடம் மக்கள் மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தனர். மேற்படி விடயத்தில் உரிய உயர் அதிகாரிகளை சந்தித்து மக்களுக்கான தீர்வினை பெற்றுத்தருவோம் என்று மாகாணசபை உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். இவ் வாக்குறுதிக்கு அமைவாக மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்களுக்கும் - மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் உயர்திரு. பொ. சுரேஸ் மற்றும் , மீள்குடியேற்ற செயலணியின் திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப் யாஸீன் ஆகியோருக்குமிடையில் விசேட சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் மீள்குடியேற்ற அமைச்சில் இடம்பெற்றது. அச் சந்திப்பின் போது வீட்டுத்திட்டம் தொடர்பில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இவை தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கு எழுத்துமூலம் அறிவுரை வழங்குவதற்கு பொ. சுரேஸ் அவர்கள் பணிப்புரை விடுத்தார். மீள்குடியேற்ற அமைச்சு மூன்று நிபந்தனைகளோடு வீட்டுத்திட்டங்களை வழங்க இணங்கியிருக்கின்றது.
1. பயனாளி இலங்கைப் பிரஜையாகவும் யுத்தத்தினால் பாதிக்ப்பட்டவராகவும் இருத்தல்.

2. கடந்த 20 வருட காலத்தில் அரசாங்க உதவியோடு எவ்வித வீட்டுத்திட்டங்களையும் பெறாதவராக இருத்தல்.

3. மீள்குடியேறியுள்ள பிரதேசத்தில் சொந்தக்காணியை உடையவராக இருத்தல்.
இவை தவிர வேறு எந்த ஒரு நிபந்தனைகளையும் மீள்குடியேற்ற அமைச்சு கருத்தில் கொள்ளவில்லை என செயலாளர் தெளிவுபடுத்தினார். மேற்படி விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை ஒன்று வெகுவிரைவில் இடம்பெறும் என கௌரவ வடக்குமாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்கள் எம்மிடம் தெரிவித்தார். 

தகவல்: என். எம். அப்துல்லாஹ்

Comments