யாழ் முஸ்லிம்களுக்கு வீட்டுக்கு வீடு; இன்றைய கூட்டத்தில் தீர்மானம்
n.m. abdullah
யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் வீட்டுத்திட்டம் தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் ஏற்பாட்டில் விஷேட மக்கள் சந்திப்பொன்று இன்று (27-11-2017) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பினை உதவி அரசாங்க அதிபர் திருவாளர் எஸ்.முரளி அவர்கள் வழிநடாத்தினார். இச்சந்திப்பில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான கௌரவ இம்மானுவேல் ஆர்னோல்ட், கௌரவ அய்யூப் அஸ்மின், மற்றும் யாழ் முஸ்லிம் வீட்டுத்திட்ட அமைப்பின் பிரதிநிதிகள், வீட்டுத்திட்டப் பயனாளிகள், பிரதேச செயலக அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
இங்கு கருத்து வெளியிட்ட மாகாணசபை உறுப்பினர் கௌரவ அஸ்மின் அவர்கள், நான் எனது மக்களின் கருத்துக்களை அவர்களது மனோநிலையினை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன், அவர்கள் தமக்கு ஒரு பாரிய அநீதி இழைக்கப்பட்டதாகவே எண்ணுகின்றார்கள், 2016 டிசம்பர் 20ம் திகதி மத்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டுடன் கூடிய 200 வீட்டுத்திட்டங்கள் முஸ்லிம் மக்களுக்கு வழங்கவென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கு வழங்கப்பட்டன, ஆனால் சுமார் 6 மாதங்களுக்கும் மேலாக இது தொடர்பில் ஏதேனும் காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக நாம் அறியவில்லை. இறுதி நேரத்தில் அதனை நடைமுறைப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன 288 முஸ்லிம் குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றப் பதிவுகளை மேற்கொண்டு தம்முடைய சொந்தக் காணிகளில் வீடுகளை நிர்மானிப்பதற்கு வீட்டுத்திட்டங்களுக்காக கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். இவர்களுள் 51 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக வசித்து வருகின்றார்கள், இவர்கள் மாத்திரமே வீட்டுத்திட்டத்தைப் பெற அடிப்படைத் தகுதியுடையவர்கள் என்ற அடிப்படையில் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது, இதிலும் 17 க்கும் குறைவான குடும்பங்களுக்கே வீட்டுத்திட்டங்களை வழங்க முடியும் என்று யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டார்கள். இது ஒரு பாரிய அநீதியாகும். கிடைக்கப்பெற்ற “200 வீட்டுத்திட்டங்களையும் வெற்றிகரமாகத் திருப்பியனுப்புதல் என்பதே அதிகாரிகளின் இலக்காக இருக்கின்றது” என மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
இதுவிடயமாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களோடு கலந்துரையாடும்போது அவர் தருகின்ற தகவல்களுக்கும், மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளைச் சந்திக்கின்றபோது அவர்கள் தருகின்ற தகவல்களுக்கும் , யாழ்ப்பாணப் பிரதேச செயலக அதிகாரிகளைச் சந்திக்கின்றபோது அவர்கள் தருகின்ற தகவல்களுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் இருக்கின்றன. யாழ்ப்பாண பிரதேச செயலக அதிகாரிகள் தேசிய கணக்காய்வுத் திணைக்களத்தின் கீழ் இயங்குகின்றவர்களைப் போலவே எமது மக்களோடு நடந்துகொள்கின்றார்கள். அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கோ அல்லது மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளுக்கோ கட்டுப்பட்டவர்கள் அல்ல என்றே அவர்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கின்றன. இதனால் இறுதியில் பாதிக்கப்படுவது எமது மக்களேயாகும். யாழ்ப்பாண முஸ்லிம் மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்க முடியாது என்று நினைத்தால் அதனை வெளிப்படையாகச் சொல்லுங்கள், எமது மக்களுக்கான வீட்டுத்திட்டங்களை நாம் வேறுவகையில் நிறைவேற்றிக்கொள்கின்றோம், எமது மக்களை மன உளைச்சலுக்குள்ளாக்காதீர்கள், அவர்களை அவமானப் படுத்தாதீர்கள், அவர்களை அலைக்கழிக்காதீர்கள், அவர்களை நோவினை செய்யாதீர்கள் என்று மிகவுமே வெளிப்படையாகக் கேட்டுக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டார்.
இங்கு கருத்து வெளியிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்ட் அவர்கள், எமது முஸ்லிம் மக்களின் வீட்டுத்திட்டப் பிரச்சினை தொடர்பாக நான் அவர்களோடு பல்வேறு சந்திப்புக்களை நடாத்தியிருக்கின்றேன், ஆனால் எமது அதிகாரிகள் மக்களுக்கு நன்மை நடக்கவேண்டும் என்ற ஒழுங்கில் செயற்படுகின்றார்களா என்ற கேள்வி எனக்கு அடிக்கடி எழுவதுண்டு, இந்த மக்களின் துன்ப துயரங்களை அவர்களிடமிருந்து கேட்டறிந்து கௌரவ மாவை சேனாதிராஜா (பா.உ) கௌரவ எம்.ஏ.சுமந்திரன் (பா.உ) அவர்கள், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் எல்லோருமாக பல்வேறு சாதகமான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார்கள், ஆனால் அத்தீர்மானங்கள் ஏன் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை? என்று நான் கேட்க விரும்புகின்றேன். எனவே இன்றைய கூட்டத்தின் தீர்மானங்கள் அனைத்தும் உடனடியாக அமுலாகும் விதத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என நான் அன்பாக அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன். என்று குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தின் தீர்மானங்களாக பின்வரும் விடயங்கள் நிறைவேற்றப்பட்டன
மீளக்குடியேறுகின்ற அனைத்து யாழ் முஸ்லிம்களுக்கும் அவர்கள் வேறு எவ்விதமான அரச உதவிகளையும் பெற்றிருக்காத சந்தர்ப்பத்தில் “வீட்டுக்கு வீடு” என்ற ஒழுங்கில் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படல் வேண்டும்.
வீட்டுத்திட்டங்களை வழங்குகின்ற குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கை, மற்றும் அவர்களது பொருளாதார நிலைகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
முன்வைக்கப்பட்டுள்ள 200 வீட்டுத்திட்டங்களுள் கூடுதலானவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்க மட்டத்திலும், சமூக மட்டத்திலும் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும்
வீட்டுத்திருத்தங்களுக்காக 4 இலட்சம் ரூபாய்வரையான உதவித்திட்டங்கள் குறித்தும் பரிசீலிக்கப்படும்.
போன்ற முக்கிய தீர்மானங்கள் இங்கு நிறைவேற்றப்பட்டன.



Comments
Post a Comment