மஹிந்தவின் சகாக்களிடமிருந்து உறுப்புரிமையைப் பறிக்க மைத்திரி அணி திட்டம்!
மஹிந்த அணியான பொது எதிரணி பக்கமுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து, அவர்களை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது என அறிய முடிகின்றது.
குமார வெல்கம, பிரசன்ன ரணதுங்க, சி.பி.ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, திலும் அமுனுகம ஆகிய எம்.பிக்களுக்கு எதிராகவே கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னதாக இந்தக் குழுவினருக்குப் பாடமொன்றைக் கற்பிக்க வேண்டும் என்றும், அவசரமாக மத்திய குழுவைக் கூட்டி அதிரடி நடவடிக்கை எடுக்கும் முடிவை எடுக்க வேண்டும் என்றும் சு.கவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சியின் தலைமைப்பீடத்திடம் எடுத்துரைத்துள்ளனர்.
இவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிர்காலத்தில் கடும் நெருக்கடி ஏற்படும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொது எதிரணியால் அநுராதபுரத்தில் நடத்திய கூட்டத்தின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீதும், தற்போது அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் மீதும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சு.க.முடிவெடுக்கவுள்ளது.


Comments
Post a Comment