இலங்கையை விட்டு நகர்ந்து செல்லும் சூறாவளிக் காற்று

கடந்த இரண்டு நாட்களாக இலங்கையின் பல்வேறு பிரதேசங்களையும் அவதிக்குள்ளாக்கிய சூறாவளிக்காற்று தற்போது இலங்கையை விட்டு தொலைதூரத்துக்கு நகர்ந்துள்ளது.

இலங்கையின் அசாதாரண வானிலைக்கு காரணமாக அமைந்த ஓக்கி சுழற்காற்று தற்போது இலங்கையில் இருந்து 600 கடல் மைல் தொலைவில் அரபிக் கடலில் மையம் கொண்டிருப்பதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

அதன் காரணமாக காற்றின் வேகம் குறைவடைந்து அசாதாரண வானிலையும் மாற்றமடைந்தாலும் மழை மட்டும் இன்னும் ஓரிரு நாட்கள் வரை தொடர்ந்திருக்கும் என்றும் வானிலை அவதான நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்தி, மத்தி, சப்ரகமுவ, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் ஒருசில இடங்களில் மணித்தியாலத்துக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்றும் வீசக் கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Comments