எங்களின் கண்ணியமிக்க தலைவர்களே.!


எம்.எச்.எம்.இப்றாஹிம்.

கடந்த அரசாங்கத்தில் தம்புள்ள பள்ளிவாசலை வைத்தே ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முன்னின்ற நீங்கள் நல்லாட்சி என்ற போர்வையில் நல்ல மனிதர் என்று மேண்மைதங்கிய ஜனாதிபதி மைதிரி அவர்களையும், மேண்மை தங்கிய பிரதமர் ரணில் அவர்களையும் ஆட்சிக்கு கொண்டுவந்தீர்கள்.

இப்போது அந்த பள்ளிவாசல் விடயத்தில் எந்த தீர்வையும் உங்களால் இதுவரை பெற்றுக்கொடுக்க முடியவில்லையென்ற உங்கள் இயலாமையை நிரூபித்து வருகின்றீர்கள்.
இந்த சிறிய விடயத்தைக்கூட இதுவரை நிறைவேற்ற முடியாத நீங்கள், மீண்டும் முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் வந்து எப்படி வீரவசனம் பேசப்போகின்றீர்கள்?

நீங்கள் பட்டம் பதவிக்காகத்தான் பொய்களைக்கூறி மக்களை ஏமாற்றி வாக்குகளைப்பெறுகின்றீர்கள் என்பது தெளிவாகின்றது அல்லவா? இதனை அறியாத, மறதிக்கார சமூகத்தின் இயலாமையை பயன்படுத்தி அவர்களை ஏமாற்றி காரியத்தை சாதித்துச் செல்லுகின்றீர்கள் அல்லவா?

நீங்கள் நினைத்துக் கொண்டீர்களா? இந்த உலகம்தான் நிரந்தரம் என்று?
படைத்த இறைவன் இதற்கெல்லாம் ஒருநாள் கணக்குத்தீர்ப்பான் என்று நீங்கள் நம்பவில்லையா?

இந்த நல்லாட்சியிலும், கடந்த ஆட்சியிலும் முஸ்லிம்சமூகத்துக்கு நடந்த அநியாயங்களில் எந்த விடயத்துக்கு தீர்வைப் பெற்றுத் தந்துள்ளீர்கள் என்றாவது உங்கள் மனச்சாட்சியிடம் கேட்டுப்பார்த்த காலங்கள் உண்டா?

பிரச்சினைகள் என்றால் ஆயிரம் பிரச்சினைகள் உண்டு ஆனால் கேவலம் தம்புள்ள பள்ளிவாசலின் பிரச்சினையையாவது தீர்த்து வைத்தீர்களா?

ஆகவே, எங்கள் தங்கத் தலைவர்களே..! நீங்கள் எங்களை ஏமாற்றலாம் இறைவனை ஒருநாளும் ஏமாற்ற முடியாது என்பதையாவது புரிந்து கொள்ளுங்கள். நாளை நீங்கள் மரணித்தால் அடுத்த நிமிடமே நாளுபேர் உங்களை தூக்கிசென்று ஆறடி நிலத்துக்குள் வைத்து மூடிவிடுவார்கள், அதற்கப்புரம் இறைவனின் பிடியில் நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள் என்பது நிச்சயமாக நிஜமானது தலைவர்களே..!

ஆகவே இந்த சின்ன விடயமான தம்புள்ள பள்ளிவாசல் விடயத்துக்கு கூட நீங்கள் கொண்டுவந்த நல்லாட்சி மூலம் தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாத நீங்கள் தலைவர்களாக இருப்பதற்கு தகுதியில்லாதவர்கள் என்பதுடன் இனிமேல் தேர்தல் மேடைகளில் நான்தான் ராஜா என்று மக்களிடம் வீராப்பு பேச வராதீர்கள். அப்படித்தான் வந்தாலும் வீரம் பேசாதீர்கள். நீங்கள் பேசினால் வடிவேலுவின் நினைப்புத்தான் வருகின்றது.

ஆகவே, தலைவர்கள் நாங்கள் என்று சொல்லுவதை தவிர்த்துவிட்டு நாங்கள் சிறந்த நடிகர்கள் என்று கூறுங்கள் அதுதான் உங்களுக்கு பொறுத்தமாக இருக்குமென்று நினைக்கின்றேன்.

Comments