கிந்தோட்டையை மறந்துவிட்டோமா?
காலி மாவட்டத்தின் கிந்தோட்டை பிரதேசத்தில் மூன்று மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களின் இழப்புகளை மதிப்பீடு செய்து நஷ்டயீட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தாமதமாகின்றமை கவலைக்குரியதாகும்.
பாதிப்புகள் சம்பந்தமாக இதுவரை பொலிஸ் முறைப்பாடுகள் மாத்திரமே பொது மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. மாறாக நஷ்டயீட்டை வழங்கும் வகையிலான மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. சம்பவம் நடந்து மூன்று வாரங்கள் தாண்டிவிட்ட போதிலும் இதுவரை கிராம சேவகர் தமது வீடுகளின் பாதிப்புகளை பார்வையிடவோ சேதங்களை மதிப்பிடவோ வருகை தரவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் வேறு அலுவல்களில் ஈடுபட்டுள்ளதால் அவர்களைக் கொண்டு மதிப்பீடுகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் அவர்களது பிரசன்னமின்றி தம்மால் மதிப்பீடு செய்ய முடியாது என்றும் கிராம சேவகர்கள் காரணம் கூறுகின்றனர். இந் நிலையில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை அழைத்துவந்து நஷ்டயீடு வழங்குவதற்கான பணிகளை துரதிப்படுத்த வேண்டியது முஸ்லிம் அரசியல் தலைவர்களின் கடப்பாடாகும்.
சம்பவம் நடைபெற்றவுடன் நாங்கள்தான் முதலில் சென்றோம் என ஆளுக்காள் மார்தட்டுவதை விட பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதே அரசியல் தலைமைகளின் கடப்பாடாகும்.
தற்போது உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இருப்பதால் கிந்தோட்டையை மறந்துவிட்டார்கள் என்பதே நிதர்சனமாகும். எனினும் தேர்தல்களை காரணம் காட்டி இந்த வன்முறைகளால் மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள அப்பாவி மக்களுக்கு நஷ்டயீட்டைப் பெற்றுக் கொடுக்கும் கடப்பாட்டிலிருந்து எவரும் தப்பிவிட முடியாது.
எனவேதான் முஸ்லிம் அரசியல்வாதிகள் இதுவிடயத்தில் உடனடியாக தலையிட்டு தொழில்நுட்ப அலுவர்களையும் கிராம சேவகர்களையும் பயன்படுத்தி இழப்பீடுகளை மதிப்பீடு செய்யவும் அதற்கான நஷ்டயீடுகளைப் பெற்றுக் கொடுக்கவும் முன்வர வேண்டும்.
பொதுவாக அரச இயந்திரம் இவ்வாறான விடயங்களில் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பது வழக்கமாகும். எனினும் கிந்தோட்டை விடயத்தில் பிரதமர் நேரில் சென்று உத்தரவிட்டும் நஷ்டயீடு வழங்கும் நடவடிக்கைகள் தாமதமாகுவதாயின் இதன் பின்னணியில் ஏதேனும் அரசியல் அழுத்தங்கள் உள்ளனவா எனும் சந்தேகமும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அளுத்கம வன்முறைகள் இடம்பெற்ற பின்னர் இராணுவ வீரர்களின் உதவியுடன் பாதிப்புகள் சீர்செய்யப்பட்டன. பள்ளிவாசல்கள், வீடுகள் என்பன முழுமையாக பூரணப்படுத்திக் கொடுக்கப்பட்டன. எனினும் அளுத்கம சம்பவத்தைப் பிரசாரப்படுத்தி முஸ்லிம்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தின் காலத்தில் கிந்தோட்டை சம்பவம் நடந்தமை ஏற்றுக் கொள்ள முடியாததாகும். அதிலும் நஷ்டயீடு வழங்குவதில் கூட தாமதங்கள் ஏற்படுத்தப்படுவது மிகவும் கவலை தருவதாகும்.
எனவேதான் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அழுத்தங்களை வழங்கி பாதிக்கப்பட்ட கிந்தோட்டை மக்களுக்கு நஷ்டயீட்டைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.


Comments
Post a Comment