தலைமைத்துவ வெற்றிடம்

எஸ்.றிபான்
பல­வீ­ன­மான தலை­வர்­களைக் கொண்­டுள்ள ஒரு சமூகம் பல­மான தலை­வர்ளைக் கொண்­டுள்ள சமூ­கத்­தி­னரால் ஒடுக்­கப்­ப­டு­வ­தனைத் தவிர்க்க முடி­யாது. அந்த சமூ­கத்தின் இருப்பு, பாது­காப்பு போன்ற அடிப்­படை உரி­மைகள் கேள்­வி­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­படும். இந்­நி­லை­யில்தான் இலங்கை முஸ்­லிம்கள் உள்­ளார்கள். முஸ்­லிம்­க­ளி­டையே பல துறை சார்ந்த தலை­வர்கள் இருந்­தாலும் எல்லாத் தலை­வர்­களும் சமூகம் சார்ந்த சிந்­த­னை­க­ளுக்கு அப்பால் சுய­நலம், துணிச்­ச­லற்ற தன்மை, கறை­ப­டிந்த கைகள், ஒழுக்கக் குறை­பாடு போன்ற பல கார­ணி­க­ளினால் தலை­யாட்டும் பொம்மைத் தலை­வர்­க­ளாக இருந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். குறிப்­பாக முஸ்­லிம்­களின் அர­சியல் தலைமை வெற்­றி­ட­மா­கவே உள்­ளது.
மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்­ரபின் மர­ணத்­திற்குப் பின்னர் முஸ்­லிம்­க­ளுக்­கு­ரிய அர­சியல் தலைமை எனும் பொறுப்பை பொருத்­த­மா­ன­வர்கள் ஏற்றுக் கொள்­ள­வில்லை. முஸ்­லிம்­க­ளுக்குப் பொருத்­த­மான, நல்ல ஆளு­மை­யுள்ள அர­சியல் தலை­மையின் இடை­வெளி நீடித்துக் கொண்­டி­ருப்­ப­த­னால்தான் முஸ்லிம்கள் பல பிரச்­சி­னை­க­ளுக்கு முகங் கொடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.
ஒரு அர­சியல் கட்­சியின் தலைவர் என்­ப­தற்­காக அவர் முஸ்­லிம்­களின் அர­சியல் தலை­வ­ராக அடை­யா­ளப்­ப­டுத்த முடி­யாது. இன்று அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­க­ளையே அர­சாங்­கமும், பேரி­ன­வாத சக்­தி­களும் முஸ்­லிம்­களின் அர­சியல் தலை­மை­யாக ஏற்றுக் கொண்­டுள்­ளன. இவர்­களின் எல்லா வகை­யான பஞ்­சத்­திற்கும் பேரி­ன­வா­திகள் தீனி போட்டு வளர்த்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இத்­த­கை­ய­வர்கள் அர­சாங்­கத்­தி­னதும், பேரி­ன­வா­தி­க­ளி­னதும் திட்­டங்­க­ளுக்கு சம்­மதம் தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதனால், இன்­றுள்ள கட்­சி­களின் அர­சியல் தலை­வர்­களில் ஒரு­வ­ரை­யா­வது முஸ்­லிம்­களின் அர­சியல் தலைவர் என்று விரல் நீட்ட முடி­யா­துள்­ளது.
ஆளுமை மிக்க தலைமை
இலங்­கையில் அர­சியல் அதி­காரம் சகல துறை­க­ளிலும் செல்­வாக்கு செலுத்திக் கொண்­டி­ருக்­கின்­றது. ஆதலால், முஸ்­லிம்­களின் அர­சியல் தலைவர் என்­பவர் ஆளுமைமிக்­க­வ­ராக இருக்க வேண்டும். இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு ஆளுமைமிக்க பல தலை­வர்கள் இருந்­துள்­ளார்கள். அவர்­களில் இறு­தி­யாக மர்ஹும் அஷ்­ர­புக்குப் பின்னர் ஆளுமை கொண்ட தலை­வர்கள் முஸ்­லிம்­க­ளி­டையே இல்­லா­தி­ருப்­ப­துதான் முஸ்­லிம்கள் இன்று எதிர் கொண்­டுள்ள பல பிரச்­சி­னை­க­ளுக்கு கார­ண­மாகும்.
மர்ஹும் அஷ்ரப் முஸ்லிம் காங்­கி­ரஸை தோற்­று­வித்து அதன் ஊடாக முஸ்­லிம்­களின் குர­லாக செயற்­பட்டார். பௌத்த இன­வா­தி­க­ளுக்கு அடங்­காது முஸ்­லிம்­களின் நியா­யங்­களை நிறு­வினார். முஸ்­லிம்­களின் அர­சி­யலும், அபி­லா­சை­களும் தனித்­து­வ­மா­ன­தென்று அடை­யா­­ளப்­ப­டுத்­து­வதில் வெற்றி கண்டார். அவ­ரிடம் காணப்­பட்ட பல­வீ­னங்கள் முஸ்லிம் சமூ­கத்தை பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தற்குத் துணை போக­வில்லை.
ஆனால், அவ­ரது மர­ணத்தின் பின்னர் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­மை­யாக இருந்­தாலும், அக்­கட்­சி­யோடு பல கார­ணங்­க­ளுக்­காக முரண்­பட்டு புதிய கட்­சி­களை தோற்­று­வித்து தலைவர் பத­வியில் இருந்து கொண்­டி­ருக்கும் தலை­வர்­க­ளாக இருந்­தாலும் அவர்­களின் பல­வீ­னங்கள் முஸ்லிம் காங்­கிரஸ் முதல் ஏனைய கட்­சி­களைப் பல­வீ­னப்­ப­டுத்தி இருப்­ப­தோடு, முஸ்லிம் சமூ­கத்­தையும் பல­வீ­னப்­ப­டுத்தி தலை குனியச் செய்­துள்­ள­மையை யாரும் மறுக்க முடி­யாது.
குறிப்­பாக முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­மைக்கு ஏனைய கட்­சி­களின் தலை­வர்­களை விடவும் சமூகம் சார்ந்த பொறுப்­புக்கள் அதி­க­முண்டு. என்­றாலும் தலை­மையின் பல­வீ­னங்­களும், தலை­மையின்  பல­வீ­னங்­களை ஏற்றுக் கொண்­டி­ருக்கும் உயர்­பீட உறுப்­பி­னர்­களின் பல­வீ­னங்­களும் முஸ்லிம் சமூ­கத்தின் உரி­மை­களை தட்டிக் கேட்­ப­தற்கு முடி­யாத கையறு நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அக்­கட்­சியின் உயர்­பீட உறுப்­பி­னர்­களில் பலர் தலை­மையின் பல­வீ­னத்தை திருத்­தி­ய­மைத்து கட்­சி­யையும், தலை­மையையும் பலப்­ப­டுத்­து­வ­தற்கு பதி­லாக பல­வீ­னங்­களை நியா­யப்­ப­டுத்தும் வாதங்­க­ளையே மேற்­கொண்­டுள்­ளார்கள். இதனால், ஒட்டுமொத்­த­மாக இவர்கள் அனை­வ­ரி­னதும் ஆளுமை குறித்து சந்­தே­கங்­களை எழுப்ப வேண்­டி­யுள்­ளது. வெறித்­த­ன­மான தலை­மைத்­துவ ஆலா­பனை சமூ­கத்தை அழி­வுக்கே இட்டுச் செல்லும் என்­ப­தனை முஸ்லிம் கட்­சியின்  உயர்­பீட உறுப்­பி­னர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இதே வேளை, இன்று முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கு போட்­டி­யாக வளர்ந்து கொண்­டி­ருக்கும் கட்­சி­யாக அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் திகழ்­கின்­றது. தற்­போது இக்­கட்­சியின் செல்­வாக்கு அம்­பாறை மாவட்டம் வரைக்கும் வியா­பித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. ஆயினும், இக்­கட்­சியின் தலை­மையை முஸ்லிம் சமூ­கத்­திற்­கு­ரிய தலை­வ­ராக வளர்த்­தெ­டுப்­ப­தற்­கு­ரிய எந்­த­வொரு செயற்­றிட்­டத்­தையும் அக்­கட்சி கொண்­டி­ருக்­க­வில்லை.
முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு குரல் கொடுக்­கின்­ற­தொரு தலை­வ­ரா­கவும், கட்­சியின் உயர்­பீட உறுப்­பி­னர்­க­ளுக்கு உயர் பத­வி­களைத் தரு­கின்­ற­தொரு தலை­வ­ரா­க­வுமே அக்­கட்­சியின் உயர்­பீட உறுப்­பி­னர்கள் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரை வைத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அக்­கட்சி தனியே தலைவர் எனும் பாத்­தி­ரத்தில் தொங்கிக் கொண்­டி­ருக்கும் ஒன்­ற­காவே உள்­ளது. இக்­கட்­சியின் உயர்­பீட உறுப்­பி­னர்கள் முஸ்லிம் காங்­கி­ரஸின் உயர்­பீட உறுப்­பி­னர்­களைப் போன்று தலை­மைத்­து­வத்தின் குறை­களை நிவர்த்தி செய்­வ­தற்கு பதி­லாக தலை­வ­ரிடமிருந்து எதனை கறந்து கொள்­ள­லா­மென்று வட்­ட­மி­டு­கின்­ற­வர்­க­ளா­கவே உள்­ளார்கள். இதனால், இக்­கட்­சி­யாலும் முஸ்லிம் சமூ­கத்­திற்குத் தேவை­யான ஆளு­மையை வளர்த்துக் கொள்­வ­தற்கு முடி­யா­துள்­ளது.
இதே வேளை, தேசிய காங்­கி­ரஸின் தலை­மையை நோக்­கினால் அக்­கட்சி கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் திசையை தேடும் கட்­சி­யா­கவே இருக்­கின்­றது. அம்­பாறை மாவட்­டத்தில் அக்­க­ரைப்­பற்று பிர­தே­சத்தில் கட்­சியின் செல்­வாக்கை நிலைநிறுத்த வேண்­டு­மென்­ப­தற்கு அளிக்கும் முக்­கி­யத்­துவம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­க­ளுக்கு வழங்­கு­வ­தில்லை. 
கடந்த உள்­ளூராட்சி சபைத் தேர்­தலில் இக்­கட்சி அக்­க­ரைப்­பற்றில் தமது செல்­வாக்கை நிலை நிறுத்­தி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. இக்­கட்சி தனியே தலை­வரின் கட்­டுப்­பாட்­டி­லேயே உள்­ளது. உயர்­பீட உறுப்­பி­னர்கள் இக்­கட்­சியில் ஒரு பொருட்­டே­யில்லை.
இதே வேளை, முஸ்லிம் காங்­கி­ர­ஸி­லி­ருந்து கடை­சி­யாக பிரிந்து வந்­துள்ள ஹஸன் அலி, பசீர் சேகு தாவூத் ஆகி­யோர்கள் செய­லா­ள­ரா­கவும், தவி­சா­ள­ரா­கவும் உள்ள ஐக்­கிய சமா­தானக் கூட்­ட­மைப்பு மர்ஹும் அஸ்­ரப்பின் கன­வு­களை நன­வாக்­கு­வ­தற்கு புறப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றது.
முஸ்லிம் காங்­கிரஸ் மர்ஹும் அஷ்­ரபின் கன­வு­களை தொலைப்­ப­தற்கு இவர்­களும் கார­ண­மென்­ப­தனை சொல்­லி­யாக வேண்டும். ஆதலால், இவர்கள் கூட மர்ஹும் அஷ்­ரபின் கன­வு­களை நன­வாக்­கு­வ­தற்­கு­ரிய ஆளு­மையை முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்குள் இருந்த காலத்தில் உறுதி செய்­ய­வில்லை.
 இவர்கள் ரவூப் ஹக்கீம் எனும் தனி மனி­தனை காப்­பாற்­று­வ­தற்கே தமது முழு ஆளு­மை­யையும் பயன்­ப­டுத்­தி­னார்கள் என்­ப­த­னையும் சுட்டிக் காட்­டி­யாக வேண்டும்.
கட்­சி­களின் பலம்
அர­சியல் கட்­சி­களின் பலம் அக்­கட்சி பாரா­ளு­மன்­றத்தில் பெற்றுக் கொள்ளும் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையை வைத்தே முடிவு செய்­யப்­ப­டு­கின்­றது. அந்த வகையில் முஸ்லிம் கட்­சிகள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு தேர்­தலில் முஸ்­லிம்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொண்­டுள்­ளன. முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய இரு கட்­சி­களும் பாரா­ளு­மன்­றத்தில் உறுப்­பி­னர்­களைக் கொண்­டுள்ள போதிலும் இக்­கட்­சிகள் பெற்றுக்கொடுத்த சமூக உரி­மைகள் எவை­யென்று கேட்­கின்றோம். உரிமைக் கோஷத்தை தெருவில் செல்லும் சிறு­பிள்ளை கூட எழுப்­பலாம். அதில் பிரயோ­ச­ன­மில்லை. உரிமைக் கோஷத்தை அடைந்து கொள்­வ­தற்கே கட்­சி­களும், தலை­வர்­களும் தேவைப்­ப­டு­கின்­றார்கள்.
பொதுத் தேர்­தலில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைப் பெற்றுக் கொள்ளும் முஸ்லிம் கட்­சிகள் அர­சாங்­கத்தின் பங்­கா­ளிகள் என்று உருப் பெருப்பிப்­ப­தற்கே முன்­னு­ரிமை கொடுக்­கின்­றன. கட்­சியின் தலை­வ­ருக்கு அமைச்சர் பத­வியும், ஒன்று, இரண்டு பேருக்கு பிரதி அமைச்சர் பத­வியும், இன்னும் சில­ருக்கு திணைக்­களத் தலைவர் பத­வி­க­ளுமே அர­சாங்­கத்தின் பங்­கா­ளி­க­ளா­வ­தற்கு பேரம் பேசப்­ப­டு­கின்­றன. ஆதலால், மக்­க­ளினால் வழங்­கப்­படும் அர­சியல் பலம் கட்­சியின் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும், உயர்­பீட உறுப்­பி­னர்­களும் வாழ்­வ­தற்­கு­ரிய ஆதா­ரங்­களைத் தேடு­வ­தற்கே பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இதன் மூல­மாக முஸ்லிம் கட்­சி­களின் சுய­நலம் தெளி­வா­கின்­றது.
எப்­போதும் ஆளுமை குறைந்­த­வர்கள் சுய­ந­ல­வா­தி­க­ளா­கவே இருப்­பார்கள்.
மேலும், பங்­காளி என்­ப­தற்­காக பெற்றுக்கொண்ட பத­வி­களை தக்க வைத்துக் கொள்­வ­தற்­காக அர­சாங்­கத்­தினால் கொண்டு வரப்­படும் அனைத்து சட்ட மூலங்­க­ளையும் கண்­களை மூடிக் கொண்டு ஆத­ர­வ­ளிக்கும் மன­நி­லை­யையும் இவர்கள் கொண்­டுள்­ளார்கள். முஸ்­லிம்­களின் அர­சி­ய­லையும், உரி­மை­க­ளையும் தாரை வார்த்துக் கொடுக்கும் கூட்­டங்கள் பல்­வேறு பெயர்­களைச் சூட்டிக் கொண்டு செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. சமூ­கத்­திற்­காக தலையைக் கொடுப்­ப­தற்கும் தயா­ராக இருக்­கின்­ற­வர்­க­ளி­னா­லேயே சமூ­கத்தின் ஆளுமை மிக்க தலை­வ­ராக செயற்­பட முடியும்.
முஸ்­லிம்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக தேர்தல் காலங்­களில் உரி­மை­களைப் பற்றி அதிகம் பேசிக் கொள்ளும் முஸ்லிம் கட்­சிகள் ஆட்­சியில் இருக்கும் அர­சாங்­கத்தை கண்­டிப்­பார்கள். முஸ்­லிம்­களின் உரி­மை­களை அர­சாங்கம் அழித்துக் கொண்­டி­ருப்­ப­தாக அல­று­வார்கள்.
ஆனால், தேர்தல் முடிந்­ததும் பிணக்க அர­சி­யலை மறந்து இணக்க அர­சி­ய­லுக்குள் செல்­வார்கள். பெரும்­பான்­மை­யி­னரின் மனதை வெல்லும் வகையில் நடந்துகொள்ள வேண்­டு­மென்றும் கூறு­வார்கள். ஆளுமை உள்ள அர­சியல் தலைவர் பொய்­களைக் கூற மாட்டார். இணக்க அர­சியல் மூலம்தான் முஸ்­லிம்­களின் உரி­மை­களை பெற்றுக் கொள்­ளலாம் என்று சொல்லிக் கொள்­ளவும் மாட்டார்.  இணக்க அர­சி­யலில் இருந்து கொண்டே முஸ்­லிம்­க­ளுக்கு பாத­கங்­களை ஏற்­ப­டுத்தக் கூடிய திவி­நெ­கம, 18வது திருத்தம், 19வது திருத்தம், தேர்தல் முறை மாற்றம் ஆகிய சட்ட மூலங்கள் உட்­பட பல­வற்­றுக்கு ஆத­ரவு அளித்­துள்­ளார்கள். இவைகள் இணக்க அர­சி­யலில் முஸ்­லிம்கள் அடைந்து கொண்ட தீமைகள். ஆளு­மை­யுள்ள எந்தத் தலை­மையும் முஸ்­லிம்­க­ளுக்கு பாதகங்­களை ஏற்­ப­டுத்தக்கூடிய சட்ட மூலங்­களை ஆத­ரிக்க மாட்­டாது.
இறுதி யுத்தம்
விடு­தலைப் புலி­களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்த காலத்தில் முஸ்­லிம்கள் பல துய­ரங்­களை அனு­ப­வித்­தார்கள். இன்று வட­மா­காண முஸ்­லிம்­களில் பெரும்­பா­லா­ன­வர்­களும், கிழக்கு மாகாண முஸ்­லிம்­களில் குறிப்­பிட்ட ஒரு தொகை­யி­னரும் காணி மற்றும் நிரந்­தர இருப்­பிடம் தொடர்­பான பிரச்­சி­னை­களை அனு­ப­வித்துக் கொண்­டி­ருப்­ப­தற்கு விடு­தலைப் புலி­களின் இன­வாத செயற்­பா­டு­களே கார­ண­மாகும். இத­னால்தான் முஸ்­லிம்கள் விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருந்­­தார்கள்.
2009ஆம் ஆண்டு நடை­பெற்ற இறுதி யுத்­தத்தின் பின்னர் விடு­தலைப் புலிகள் தோற்­க­டிக்­கப்­பட்­டார்கள். விடு­தலைப் புலி­களின் தோல்வி முஸ்­லிம்­க­ளுக்கு மகிழ்ச்­சியைக் கொடுத்­தது. காரணம், வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் தமது சொந்த தாய­கத்தில் நிம்­ம­தி­யாக வாழ­லா­மென்ற எண்­ண­மே­யாகும். ஆனால், யுத்தம் முடிந்த கையுடன் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக குறிப்­பாக வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியே உள்ள முஸ்­லிம்­களின் மீது பௌத்த இன­வாதம் இரத்த வாடையை முகர்ந்து கொள்­ளவே திட்­ட­மிட்­டது. முஸ்­லிம்­களின் மீது பல­வ­கையில் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டார்கள். இதனால், முஸ்­லிம்கள் விடு­தலைப் புலி­களின் பிடி­யி­லி­ருந்து விடு­பட்டு பௌத்த இன­வாதப் பிடிக்குள் அகப்­பட்டுக் கொண்­டார்கள். இந்தப்பிடி புலி­களை விடவும் கொடூ­ர­மா­கவே இருக்­கின்­றன. இதற்கு அர­சாங்­கத்தில் உள்ள ஒரு சிலரின் அனு­ச­ரணை இருப்­பதே கார­ண­மாகும். மஹிந்­த­ரா­ஜ­ப­­க் ஷவின் அர­சாங்­கத்தின் காலத்தில் மிகவும் தீவி­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்ட இந்தக் கொடு­மை­களை முஸ்லிம் அமைச்­சர்­க­ளி­னாலும், கட்­சி­களின் தலை­வர்­க­ளி­னாலும் தடுக்க முடி­ய­வில்லை. அர­சாங்­கத்தைக் கண்­டிக்­கவும் முடி­ய­வில்லை. இவர்­க­ளினால் பௌத்த இன­வா­தி­க­ளுக்கு எதி­ராக பொலிஸில் முறைப்­பாடு செய்­யவும், நீதி­மன்­றத்தின் உத­வியை நாடவும் முடி­ய­வில்லை.
மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷவின் அர­சாங்­கத்தில் முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்களும், அமைச்­சர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கோழை­க­ளா­கவே இருந்­தார்கள். மஹிந்­த­ரா­ஜ­ப­­க் ஷவின் ஆளு­மைக்கு முன்னால் இவர்­களின் கோவைகள் அடுக்­கப்­பட்­டி­ருந்­தன. அதனால் ஏற்­க­னவே இருந்த குறைந்த பட்ச ஆளு­மையைக்கூட இழந்து நின்­றார்கள்.
நல்­லாட்சி
மஹிந்­த­ரா­ஜ­ப­­க் ஷவின் காலத்தில் நிம்­ம­தி­யாக வாழ முடி­யாத சூழலைக் கண்ட முஸ்­லிம்கள் ஆட்சி மாற்­றத்தை வேண்­டி­னார்கள். மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வெற்றிபெறச் செய்தால் நிம்­ம­தி­யாக வாழ­லா­மென்று நினைத்­தார்கள். பெரும்­பான்­மை­யான முஸ்­லிம்கள் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வாக்­க­ளித்­தார்கள். ஆனாலும், முஸ்­லிம்­க­ளினால் பௌத்த இன­வா­தி­களின் கொடூ­ரங்­க­ளி­லி­ருந்து தப்ப முடி­ய­வில்லை. மஹிந்­த­ரா­ஜ­ப­­க் ஷவின் அர­சாங்­கத்தைப் போலவே நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் பௌத்த இனவா­தி­க­ளுக்கு அர­சாங்­கத்தின் பாது­காப்பு இருந்­தது.
நல்­லாட்சி அர­சாங்கம் எந்த வேளை­யிலும் முறிந்து விழும் நிலை­யே இருந்து கொண்­டி­ருக்­கின்­றது. அர­சாங்­கத்­திற்கு உள்ள இந்த நெருக்­க­டியைப் பயன்­ப­டுத்தி முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு முஸ்லிம் அர­சியல் தலை­மை­க­ளினால் முடி­ய­வில்லை. இவர்­களின் ஆளு­மையில் உள்ள குறை­பாடே இதற்கு கார­ண­மென்று மீண்டும் சொல்லிக் கொள்­கின்றோம்.அர­சாங்­கத்தை வீழ்த்­து­வ­தற்­காக பௌத்த இன­வா­திகள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்று தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அர­சாங்­கத்தை வீழ்த்­து­வ­தற்கு நாங்கள் ஒரு போதும் துணை­யாக செயற்­பட மாட்டோம் என்று தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அர­சாங்­கத்தை பாது­காத்துக் கொள்­வ­தற்­காக முஸ்­லிம்­களின் தலை­களைக் கூட இழப்­ப­தற்கு நாங்கள் தயார் என்­ப­தா­கவே முஸ்லிம் அர­சியல் தலை­மை­களின் நிலைப்­பா­டுள்­ளது.மஹிந்­த­ரா­ஜ­ப­­க் ஷவின் அர­சாங்­கத்தின் போது முஸ்­லிம்­களின் மீது பௌத்த இன­வாத கும்­பல்கள் தாக்­கு­தல்­களை மேற்­கொண்ட போதும் அர­சாங்­கத்தை வீழ்த்­து­வ­தற்­கா­கவே இவ்­வாறு செயற்­ப­டு­கின்­றார்கள் எனத் தெரி­வித்­தார்கள். ஆக, ஆர­சாங்­கத்தைக் காப்­பாற்ற வேண்­டு­மென்­பதை தவிர வேறு சிந்­த­னைகள் முஸ்லிம் அர­சியல் தலை­மை­க­ளிடம் இருக்­க­வில்லை. இனியும் இருக்கப் போவ­தில்லை. தமது குற்­றத்­திற்­காக வருந்­து­கின்ற உள்­ளத்­தினைக் கொண்ட ஒரு­வ­ரி­னால்தான் திருந்த முடியும். முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் இன்னும் தமது சமூக துரோகச் செயற்­பா­டு­க­ளுக்கு வருந்­த­வில்லை. தாங்கள் சமூ­கத்­திற்­காக நேரான வழியில் சென்று கொண்­டி­ருக்­கின்றோம் என்றே சொல்லிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.
வெறுப்பு
முஸ்லிம் அர­சியல் தலை­மை­களின் நட­வ­டிக்­கை­க­ளினால் முஸ்லிம்கள் அவர்களின் மீது வெறுப்புக் கொண்டுள்ளார்கள். இவர்கள் சமூகத்திற்கு ஏற்றவர்களல்லர் என்ற முடிவுக்கு பெரும்பாலான முஸ்லிம்கள் வந்துள்ளார்கள். குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் மீது அதிக வெறுப்புக் கொண்டுள்ளார்கள். முஸ்லிம்களின் வாக்குகளை சுமார் 30 வருடங்களாக முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆயினும், மக்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புக்களும் நிறைவேறவில்லை.
இதனால் முஸ்லிம்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்ப வேண்டுமென்று ஆசைப்படுகின்றார்கள். அதுபற்றி பொது வெளியில் கதைக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கு ஆளுமையுள்ள அரசியல் தலைமை ஒன்று இருந்தால்தான் தலைநிமிர்ந்து வாழ முடியும். முஸ்லிம் காங்கிரஸ் எனும் தனித்துவக் கட்சி பல அரசியல் தலைவர்களை உருவாக்கியுள்ளது. அவர்கள் யாரிடமும் முஸ்லிம் சமூகத்தை வாழ வைக்க வேண்டுமென்ற எண்ணம் கிடையாது. தங்களின் அரசியல் இருப்புக்காக பிரதேசவாதம், இனவாதம், கட்சிவாதம், தலைமைத்துவ விசுவாசம் ஆகிய சேற்றுக்குள் புதையுண்டுள்ளார்கள். கட்சியின் தலைவருக்கு எதனையும் தூக்கிக் கொடுப்பதற்கும், சேர்த்துக் கொடுப்பதற்கும் சபதம் எடுத்துள்ள உயர்பீட உறுப்பினர்களும், ஆளுமையில்லாத தலைவர்களும் மக்களின் பிரதிநிதியாக உள்ளவரை முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவ வெற்றிடம் நிரப்பப்படமாட்டாது. ஆளுமையுள்ளவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படும் போது மாத்திரமே தலைவர்களை அடையாளம் காண முடியும். இன்றுள்ளவர்களுக்கு பல தடவைகள் சந்தர்ப்பம் கொடுத்தாயிட்டு. இனியும் முஸ்லிம் சமூகம் இவர்களையே அரசியல் தலைமைகளாகத் தெரிவு செய்யுமாயின் முஸ்லிம்களின் நிலை இன்னும் மோசமாகும் என்பதனை ஒவ்வொரு முஸ்லிமும் புரிந்துகொள்ள வேண்டும்.

Comments