முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் இன்னுமா தெளிவில்லை
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மனித உரிமை மீறலும் பெண்ணுரிமை மறுப்பும் இருக்கின்றன என முஸ்லிமல்லாதோர் கூறுவார்களாயின் முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்? அவ்வாறில்லை என ஆதாரங்களுடன் விளக்க வேண்டும். இல்லாவிட்டால் சலாம் கூறி ஒதுங்கிவிட வேண்டும். கையை விரிக்க வேண்டும் பொத்திக்கொண்டிருப்பது பதிலாகாது.
தஃவத் என்பது முஸ்லிம்களை மட்டும் அழைப்பதும் விளக்கம் கூறுவதும் மட்டுமல்ல சர்வதேசத்தையும் இதன் பால் ஈர்க்க வேண்டும். அதற்கொரு அரிய சந்தர்ப்பமாகவே முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தைக் கையாள வேண்டும். இதை ஆலிம்கள் வித்துவ செருக்கோடு மூடி மழுப்பித் தவறவிடுவார்களாயின் முழுமையான தஃவத்தை நிறைவேற்றியவர்களாக அவர்கள் ஆகமாட்டார்கள்.
ஜி.எஸ்.பி. வரிச்சலுகையைப் பெற்றுக் கொள்வதற்காகவே அரசு ஐரோப்பிய கிறிஸ்தவ நாடுகளிடம் இஸ்லாத்தின் அந்தஸ்தைத் தாரை வார்த்து முஸ்லிம் தனியார் சட்டத்தைத் திருத்தப் பார்க்கிறது எனச் சில ஆலிம்கள் பூச்சாண்டி காட்டியதாலேயே முஸ்லிம்கள் இதற்கு எதிரான மன நிலையை கொண்டிருந்தார்கள் என்பதையாரும் மறைக்கக் கூடாது.
குருத்துவம் இஸ்லாத்தில் இல்லை. ஆபாக்கள் எனும் மூதாதையரையும் பின்பற்ற முடியாது இது தெரியாமல்தான் உலமாக்களை மீறி 21 முஸ்லிம் எம்.பி. க்களாலும் போக முடியாது போயிற்று. அதனால்தான் தான் உலமா சபையுடனான கலந்துரையாடலில் 6 முஸ்லிம் எம்.பி.க்கள் மட்டுமே கலந்துகொண்டபோது நமது மூதாதையரின் வழியிலிருந்து எம்மால் மாற முடியாது என அவர்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். ரிஸ்வி முப்தி 21 முஸ்லிம் எம்.பி. க்களை இதற்காக நியமிக்க வேண்டும் என்றார். எனினும் 15 பேர் கலந்து கொள்ளவில்லை கலந்து கொண்ட 6 பேர் கூறிய கருத்தும் ரிஸ்வி முப்திக்கு சார்பாகவே இருக்கிறது. இப்போது மூன்று சட்டத்தரணிகளிடம் இப்பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்கள். பாயிஸ் முஸ்தபாவையும் ஷிப்லி அஸீஸையும் சலீம் மர்சூபுடன் சேர்த்துவிட்டிருக்கிறார்கள். பாயிஸ் முஸ்தபாவும் ஷிப்லி அஸீஸும் ரிஸ்வி முப்திக்கு சார்பானவர்கள் சலீம் மர்சூப் தனித்து விடப் பட்டிருக்கிறார்.
இன்னுமொரு திட்டத்தையும் இவர்கள் நீதியமைச்சிடம் வழங்கியிருக்கிறார்கள். அதாவது முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் குறித்து முஸ்லிம் பொது மக்களிடம் அபிப்பிராயம் கோர வேண்டுமாம். முஸ்லிம் பொது மக்களில் 75% வீதமானோருக்கு இந்த சட்டம் என்ன என்பது பற்றி அறவே தெரியாது. இது பற்றி 1951 ஆம் ஆண்டு வரை இது பற்றி தெளிவுபடுத்தியதே இல்லை. மிகுதி 25% வீதமானோரும் கூட பல்வேறு தஃவத் அமைப்புகளாகவும் தரீக்காக்களாகவும் பிரிந்து நிற்கிறார்கள். எனவே இது மேலும் சிக்கலையே தோற்றுவித்துவிடும்.
2009 ஆம் ஆண்டு அரசிடமிருந்து பொறுப்பேற்று முஸ்லிம் தனியார் சட்டத்துக்காக விவாக மற்றும் விவாகரத்து விடயங்களுக்கென 9 வருட காலம் சிரமப்பட்டுழைத்த முன்னாள் நீதியரசர் சலீம்மர் சூபைக் கேளாமல் நீதியமைச்சு ஏன் ரிஸ்வி முப்திக்கு சார்பான அறிக்கையை இணையத்தளத்தில் பதிவேற்றியது? இவ் விடயத்தில் ஆலிம்களை மீறத் தக்க விளக்கம் நீதியமைச்சிடம் இல்லாததேயாகும்.
இது இஸ்லாமிய விளக்க விடயம் இதில் தீர்வு பெற நீண்டகாலம் கழிந்திருப்பதாலும் இழுபறி நிலை தொடர்வதாலும் ஆலிம்களிடம் கொடுத்து விடுவதே இலகுவழி என நீதியமைச்சு நினைத்திருக்கலாம். எனினும் இலங்கையின் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் மனித உரிமை மீறல் பெண்ணுரிமை மறுப்பு என்றெல்லாம் சர்வதேசம் சுட்டிக்காட்டுகிறது.
இது முஸ்லிம்களுக்கு மட்டுமே உரிய விடயம். இதில் முஸ்லிமல்லாதோர் தலையிடக் கூடாது. அப்படிச் செய்வது எமது மத உரிமையை மீறுவதாகும். முஸ்லிம் சட்டத்தில் கைவைக்க சர்வதேசத்துக்கு உரிமையில்லை. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தில் கைவைக்கிறார்கள் என்றெல்லாம் பரப்புரையை காலத்துக்குக் காலம் உலமாக்களில் சிலர் செய்தே காலம் விரயமாகியது.
ஆக 21 முஸ்லிம் ஆண் எம்.பி. க்களும் உலமா சபையின் பத்வாக் குழுவோடு உடன்பட்ட பிறகு தானா நீதியமைச்சு தனது இணையத் தளத்தில் ரிஸ்வி முப்தியின் சிபாரிசு அறிக்கையைப் பதிவேற்றியது? முஸ்லிம் விவாக விவாகரத்து விடயங்கள் இஸ்லாம் சம்பந்தப்பட்டவை என்பதாலேயே உலமா சபை இவ்விடயத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.
எனினும் மேற்கூறப்பட்ட மூன்று விடங்களிலும் தமக்கு சமூக நீதி கிடைக்கவில்லை என்றே முஸ்லிம் பெண்கள் குறிப்பிடுகிறார்கள். 1951 ஆம் ஆண்டு விவாக விவாகரத்துச சட்டம் இயற்றப்படும் போது இவை பற்றி எந்த முஸ்லிம் பெண்ணும் ஆட்சேபனை தெரிவித்திருக்கவில்லை. காரணம் அப்போது பெண் கல்வி போதிய அளவு வழங்கப் பட்டிருக்கவில்லை. இப்போது கல்வியில் முன்னேறியிருக்கிறார்கள். அதனால் தான் இஸ்லாத்தின் பெயரால் தாம் ஆணாதிக்கத்துக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக உணர்கிறார்கள். இவர்கள் எழுப்பும் பெண்ணுரிமைக் குரலை நோக்கி உலக குரலும் திரும்பியிருக்கிறது. இந்த சூழலில் 1951 ஆம் ஆண்டு ஆராய்ச்சியின் நிலைப்பாட்டிலேயே முஸ்லிம் அறிஞர்கள் விடாப்பிடியாக நிற்க முடியாது. நூற்றுக்கணக்கான சன்மார்க்கக் கூடங்கள் இருந்தும் ஆயிரக்கணக்கான சன்மார்க்க அறிஞர்கள் இருந்தும் பாடத் திட்டத்தில் மாற்றம் இல்லை.
சலீம் மர்சூபோடு நியமிக்கப்பட்டிருக்கும் பாயிஸ் முஸ்தபா மட்டுமல்ல ஷிப்லி அஸீஸும் உலமா சபைக்கு சார்பானவரே ஆகவே சட்டத்தரணிகளை மட்டுமே கொண்ட விசேட குழுவிடமே இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உலமாசபையின் பத்வா குழு இடம்பெறாவிட்டாலும் அதற்குச் சார்பான இரு சட்டத்தரணிகள் இடம் பெற்றிருக்கிறார்கள். சலீம் மர்சூபின் முன்னிலையிலேயே கலந்துரையாடப்பட வேண்டும் என்பதற்காகவே சலீம் மர்சூபும் அழைக்கப்பட்டதாக ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் இது சலீம் மர்சூபையும் இணங்க வைக்கும் முயற்சியாக நிகழ்ந்ததா?
உலமா சபையின் சார்பில் தலைவர் ரிஸ்வி முப்தி, செயலாளர் முபாரக் மௌலவி, உதவித் தலைவர் தாஸிம் மௌலவி, பாஸில் பாரூக் மௌலவி, அர்க்கம் நூராமித் மௌலவி, முர்ஷித் முழப்பர் மௌலவி ஆகியோர் கலந்து கொண்டார்கள். இவர்கள் ஷரீஆவுக்கு முரணான திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு முன்னோர் தயாரித்துள்ளதில் ஷரீஆவுக்கு உட்பட்ட சில திருத்தங்களையே செய்யலாம் என்றனராம்.
முடிவில் மூவர் குழு கருத்துவேறுபாடுகளைத் தீர்க்கமாக ஆராய்ந்து முடிவு செய்த பின் விரைவில் குழுவின் அங்கத்தினரை அழைத்துத் தெளிவுபடுத்தும் எனவும் கூறப்பட்டது. அப்போது முஸ்லிம் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் 9 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இனியும் தாமதம் வேண்டாம். இந்த திருத்தத்தைப் பாதிக்கப்பட்ட பெண்களே கோருகிறோம். தொடர்ந்தும் இதில் இழுபறி செய்வது கூடாது எனக் கூறினார்கள்.
மனு நீதிக்குப் புறம்பான எந்த சட்டமும் இல்லாமல் ஒரு பெண் இல்லற வாழ்வுக்குத் தகுதியாக வேண்டுமெனில் அறிவு வளர்ச்சியும் உடல் வலுவும் கண்டிப்பாகும். பூப்பெய்தி விட்டாள் என்பதற்காக சிறுமிகளை இல்லறத்தில் ஈடுபடுத்தினால் நிலைமை என்ன? குடும்பப் பொறுப்பும் இல்லா தலைமுறைகளும் எவை என அவள் அறிந்து செயற்படுவாளா? வளர்ந்தோரே இவற்றில் தவறு விடுகையில் இந்த இளசுகளின் நிலை என்ன? சிசு உருவாக்கம், சுகப் பிரசவம், பிள்ளை வளர்ப்பு, பால் கொடுப்பு ஆகியவற்றுக்குப் போதிய உடல் வலு வேண்டுமே. இத்தகைய பிளளைத் தாய்கள் மூலம் சிலர் பல பிள்ளைகளுக்கும் தந்தைகளாகி விடுகிறார்கள். அவற்றில் சில குழந்தைகள் நோஞ்சான்களாகி விடுகின்றன. ஆக பிஞ்சுக் கன்னிகளுக்கு கல்வியும் இடையில் தடைப்படுகிறது. வீட்டின் அன்றாட காரியங்களையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அமைவதில்லை. அடிக்கடி குழந்தைகள் கிடைக்குமாயின் விரைவாகவே அவர்கள் நலிந்து நடைமெலிந்து முதியவரைப் போல் இளைத்தும் விடுகிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் எந்த சுயாதீனமும் கிடையாது. பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி விடுவதுடன் அவர்களின் வாழ்நாளும் கழிந்துவிடும். மோகத்தைத் தணித்து சந்ததியை ஈன்று தரும் இயந்திரம் என்றே பலர் பெண்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். மனிதனில் பெண் பாதி எனும் வகையில் அவள் சம உரிமைக்கு உரித்துடைய வளாவாள். அந்த வகையில் ஆணாதிக்கத்தை இஸ்லாம் ஏற்றுக்கொள்ளாது என்பது இன்னுமா புரியவில்லை.
கடந்த கால ஆலிம்களும் முன்னோர்களும் விட்ட தவறுகளால்தான் பெண்ணுக்குத் தாபரிப்பைப் பிச்சைபோல கொடுப்பதும் அற்ப தொகையைக் கொடுப்பதும் கொடுக்காதிருப்பதும் அண்மைக்காலம் வரை நிகழ்ந்தே வருகின்றன. விவாகத்துக்கோ விவாகரத்துக்கோ பெண்ணின் அனுமதி தேவையில்லை. எனும் சிந்தனையும் இருந்தே வந்திருக்கிறது. சொற்ப மஹர் தொகையை மட்டுமே பதிவில் எழுதி வந்திருக்கிறார்கள். சுளையாக வாங்கும் சீதனத்தை மறை முகமாவே எடுத்து வந்தார்கள். இவைதாம் இத்தனை காலமும் அமுலில் இருந்தன. பெண்ணுக்கும் சீதனத்துக்கும் பதிவு இல்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் திருமணப் பதிவு நிகழ்ந்ததாக வரலாறு இல்லை. நபி (ஸல்) ஆயிஷா நாயகியை திருமணம் புரிகின்றபோது ஆயிஷா நாயகி வளர்ந்த ஒரு சிறுமி. நபி (ஸல்) அவர்களின் காலத்திலோ அதற்குப் பிறகோ பெண்கள் காதியாராக இருந்ததற்கும் வரலாறு இல்லை. இவை மூன்றும் உலமா சபையின் விடாப்பிடிக்குக் காரணம் என நான் நினைக்கிறேன்.
பதிவு அப்போது நிகழவில்லை என்பதற்காக இப்போதும் அது கூடாது எனக் கூற முடியுமா? ஏனெனில் கூடாது என எங்கும் கூறப்படவில்லை திருமணத்துக்கு வயதெல்லை இல்லை எனும் நிலை அன்று காணப்பட்டதால் தற்போதைய சூழலில் வயதெல்லை விதிப்பது இஸ்லாத்துக்கு முரணாகிவிடுமா? அப்போது பெண் காதி இல்லை என்பதற்காக எப்போதுமே அது கூடாது என்பதா? நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நிகழாதவையும் குர்ஆனும் ஹதீஸும் நேரடியாக ஏற்றுக் கொள்ளாதவையும் கூட காலமாற்றத்தின் அவசிய தேவையைக்கருதி இஜ்திஹாத் மூலம் அமுலாகுவது தெரியாதா. உலமா சபை தலைவர் பின்வரும் உபாயங்களையும் கையாள்கின்றார்.
1) 21 முஸ்லிம் எம். பிக்களிடமும் வழங்குமாறு கூறினார்.
2) முஸ்லிம்களிடம் மக்கள் அபிப்பிராயத்தைக் கோருமாறு கூறினார்.
3) 3 முஸ்லிம் சட்டத்தரணிகளை நியமிக்குமாறு கூறினார்.
இப்போது தனது நண்பரான முன்னாள் நீதியமைச்சர் மிலிந்த மொரகொட வின் தயவை நாடி நிற்கிறார். அவரை இவர் தனது உலமா சபை தலைமையகத்துக்கு அழைப்பித்து விபரத்தைக் கூறியிருக்கிறார். மிலிந்த மொரகொட அங்கு பேசுகையில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் முஸ்லிம்களுக்கு முக்கியமானது இதில் மாற்றங்கள் தேவை என நீண்ட காலமாக கோரப்பட்டிருந்தது. எனவே நான் நீதியமைச்சராக இருக்கையில் இதற்கென ஒரு குழுவை நியமித்திருந்தேன். அம் முயற்சி பயன்தர வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என்றார். அப்போது இவர் தெரிவுக் குழுவை நியமிக்கையில் பாயிஸ் முஸ்தபாவையே தலைமை வகிக்க அழைத்ததாகவும் எனினும் பாயிஸ் முஸ்தபா பெருந்தன்மையோடு சலீம் மர்சூபை சிபாரிசு செய்ததாகவும் கூறியிருக்கிறார். சன்மார்க்க விடயங்களை ஆராய்ந்து தீர்வுகாணும் அறிவும் திறமையும் ஆலிம்களுக்கே உள்ளதால் அவர்களின் கருத்துக்களை உள்ளடக்கிய அறிக்கையையே கவனத்தில் கொள்ளப்ப வேண்டும். அதற்கென நானே ரிஸ்வி முப்தியையும் முபாரக் மௌலவியையும் நியமித்தேன். என்றும் அவர் கூறியுள்ளார். ஆக பக்க சார்பு நிலைப்பாட்டுக்காகவே இந்த சந்திப்பு நிகழ்ந்திருப்பது தெளிவாகிறது.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் மிலிந்தமொரகொட அப்போது புதியதோர் தலைமுறைக்கான நவீன சிந்தனை எனும் நிகழ்ச்சி நிரலுக்கான தகவல்களை ரிஸ்வி முப்தியிடமும் முபாரக் மௌலவியிடமும் வழங்கியதேயாகும். இஸ்லாம் எல்லா காலங்களுக்கும் பொருத்தமானதாகும். புதிய தலைமுறைக்கென நவீன சிந்தனை என்பது இஸ்லாத்துக்குப் பொருந்தாது காரணம் இஜ்மாஃ கியாஸ், இஜ்திஹாத் என்பவை இருப்பதால் புது விளக்கங்களைப் பெற்றால் உரிய தீர்வு கிடைத்துவிடும் எதற்கும் தீர்வு இஸ்லாத்தில் இல்லாமலில்லை.
நாட்டின் சம பிரஜைகளான பெண்களைப் புறக்கணித்து சட்டங்களைத் திணிக்க முடியுமா? உலமாசபையுடன் பேசுவதில் பயனில்லை. பாதிக்கப்பட்ட பெண்களுடனேயே பேச வேண்டும் எனக் கூறி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இவர்களின் முக்கிய மூன்று கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ள உலமா சபை ஏன் மறுக்கிறது? திருமணப் பதிவு கட்டாயமாக்கப்படத் தானே வேண்டும்? ஈஜாப் கபூல் ஒரு வலி இரு சாட்சி மஹர் என மட்டுந்தான் 100 ஆண்டுகளுக்கு முன் லெப்பை மார் வலியுறுத்தினர். அதன் பிறகே "கடுத்தம்" எனும் திருமணப் பதிவை அப்போதைய முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பெற்றுத் தந்தனர்.
எனவே சட்டபூர்வமான திருமணப் பதிவு. தேவையில்லை எனக் கூற எவராலும் முடியாது. பலதார முறையை சுய நோக்கத்துக்கு ஆக்கிக்கொண்டு சில ஆண்கள் எந்த பதிவும் இல்லாமல் இஸ்லாத்தில் பதிவு கடமையல்ல எனக் கூறிவிடுகிறார்கள். விரும்பிய பெண்ணை வாய்மொழி மூலம் முடிக்கிறார்கள். வாய் மொழி மூலம் விடுகிறார்கள். இதனால் பெண்ணுக்கு சொத்துரிமை எனும் பேச்சுக்கே இடமில்லை. பிள்ளைகளுக்கு வாரிசுரிமை கிடைக்குமா? அரச ஆவணங்களில் இவர்தான் எனது கணவர் என அவள் எப்படி உரிமை பாராட்டுவாள்? அவள் அவனால் கைவிடப்பட்டதும் தாபரிப்பு பெறுவது எப்படி? பிள்ளைகளின் எதிர்கால வாழ்வாதாரங்களுக்கு வழி என்ன? எனவே சட்டபூர்வமான திருமணப் பதிவைத் தடுக்க யாருக்கும் நியாயாதிக்கம் இல்லை. இதில் பெண்ணுரிமை மட்டுமல்ல மனித உரிமையே மீறப்படுகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.


Comments
Post a Comment