Skip to main content
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஞாயிறு நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்

மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தனியார் பஸ் வண்டிகளுக்கான பயணவழி அனுமதிப்பத்திரம் (Route Permit) வழங்குவதற்கு டென்டர் வழிமுறையைக் கடைப்பிடிக்க நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதை எதிர்த்து அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
இந்த வேலை நிறுத்தப்போராட்டம் அகில இலங்கை ரீதியில் நடத்தப்படவுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்சித் தெரிவித்தார்.
இது தொடர்பில் அஞ்சன பிரியன்சிங் தெரிவிக்கையில்;
‘தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையும் இணைந்து பஸ்வண்டி பயணவழி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு கேள்விப்பத்திர (டென்டர்) வழிமுறையொன்றினைக் கையாள்வதற்கு முயற்சித்து வருகிறது.
தற்போது பஸ்வண்டி பயணவழி அனுமதிப்பத்திரங்கள் குறிப்பிட்ட சில பயண வழிகளுக்கு மாத்திரமே டென்டர் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
டென்டர் வழிமுறை பின்பற்றப்படுவதன் மூலம் மாத்தறை– கொழும்பு அதிவேக பாதை வழிக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதன் மூலம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 400 மில்லியன் ரூபாவை சம்பாதித்துக் கொள்கிறது. அத்தோடு மேல் மாகாண போக்குவரத்துச் சபை 450 மில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொள்கிறது என்றார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
‘தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கேள்விப்பத்திரம் கோராமல் பயணவழி அனுமதிப்பத்திரம் வழங்க வேண்டும். இந்த நடைமுறையே கடந்த 15 வருடங்களாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கேள்விப்பத்திரம் கோரி பஸ் பயணவழி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் இல்லையேல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படும் என்றார்.
x
Comments
Post a Comment